சென்னை: இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் கொஞ்சம் கூட குறைவே இல்லாமல் இந்த டெஸ்ட் போட்டி முடிவடைந்தது.
இந்தச் சூழலில் இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் செய்த மாஸ்டர் கிளாஸ் சம்பவம், இந்திய அணியை வெற்றி இலக்கைத் தொடவிடாமல் கட்டுப்படுத்தியதாக தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் பாராட்டியுள்ளார்.

அதே சமயம் ஜடேஜாவின் போர்க்குணத்தையும் அவர் குறிப்பிட்டுப் பாராட்டியிருக்கிறார். இது தொடர்பாகப் பேசிய அவர், கிரிக்கெட் என்றால் அதிரடியாகத்தான் ஆட வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இதே போல் தற்காப்பு ஆட்டத்தை ஆடினார். அது ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்பதை இந்த டெஸ்ட் போட்டி காட்டிவிட்டது.
வெற்றிக்கு 70, 80 ரன்கள் இருக்க வேண்டும் என்ற நிலையில் ஜடேஜா, பும்ரா மற்றும் ஜடேஜா, சிராஜ் ஜோடி களத்தில் போராடியது. அப்போது ஜடேஜா வெறும் தற்காப்பு ஆட்டத்தையே ஆடி ரன்களை எடுத்தார். அங்கே ஸ்டோக்ஸ், நான் உங்களை பவுண்டரி அடிக்க விடமாட்டேன் என பவுண்டரி லைனில் முழுவதும் வீரர்களை நிறுத்திவிட்டார். நீ ஓடியே ரன் எடு ஆனால் நான் உன்னை பவுண்டரி எடுக்க விட மாட்டேன் என ஸ்டோக்ஸும், நான் பந்தை தற்காத்துக் கொண்டே சிங்கிள் எடுத்து வெற்றி பெறுவேன் என்று ஜடேஜாவும் நின்றனர்.
ஜடேஜாவின் பாறை போல் ஆட்டத்திற்கு முதலில் நான் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ஆனால் கைவசம் விக்கெட்டுகள் இல்லாத நிலையில் ஜோரூட் அல்லது பஷீர் பந்து வீசும் போது ஜடேஜா இரண்டு பெரிய ஷாட்களை ஆடியிருக்க வேண்டும். ஒரு ஓவரில் 15 ரன்கள் அடித்திருந்தால் கூட நாம் வெற்றி இலக்கு அருகே வந்திருப்போம்.
இல்லை என்றால் சிராஜையாவது பட்டால் பாக்கியம் படாட்டி லேகியம் என்ற ஸ்ரீகாந்த் சார் பாணியில் பெரிய ஷாட் ஆட அனுமதித்திருக்க வேண்டும். ஆனால் இந்திய வீரர்களை இதை செய்யவிடாமல் ஸ்டோக்ஸ் தடுத்து வென்று விட்டார். டெஸ்ட் கிரிக்கெட்டை அதிரடியாக ஆடினால்தான் பார்ப்பார்கள் என்றெல்லாம் இல்லை நேற்று தோல்வியைத் தவிர்க்க ஜடேஜா ஆடிய ஆட்டத்தைப் பார்த்து யாரும் தொலைக்காட்சியை ஆஃப் செய்யவில்லை. அனைவரும் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள் என்று அஸ்வின் கூறியுள்ளார்.