தரம்சாலா : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 36 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் களமிறங்கியதன் மூலமாக இந்திய அணியின் அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 14வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். அதேபோல் தமிழ்நாட்டில் இருந்து 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இந்த போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது.

ஏனென்றால் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் அனில் கும்ப்ளே மற்றும் அஸ்வின் இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 35 முறை ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருந்தனர். இதனால் அனில் கும்ப்ளேவின் சாதனையை தனது 100வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் முறியடிக்க வேண்டும் என்று பலரும் எதிர்பார்த்தனர். முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்திய நிலையில், ஜஸ்ட் மிஸ்ஸில் சாதனை படைக்க முடியாமல் போனது.
இந்த நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 477 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலமாக 259 ரன்கள் இந்திய அணி முன்னிலை பெற்ற நிலையில், இங்கிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கியது. ரோகித் சர்மாவுக்கு முதுகுபிடிப்பு காரணமாக கேப்டன்சி பொறுப்பை பும்ரா ஏற்றுக் கொண்டார். இதனால் அஸ்வின் உடனடியாக 2வது ஓவரிலேயே அட்டாக்கிற்கு கொண்டு வரப்பட்டார். அஸ்வினும் அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் முதல் ஓவரிலேயே டக்கெட்டை 2 ரன்களில் வீழ்த்தினார்.
தொடர்ந்து அஸ்வின் சுழலில் சிக்கி கிராலி டக் அவுட்டான நிலையில், போப் 19 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து வந்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அஸ்வினின் மேஜிக்கால் 2 ரன்களில் வெளியேற, விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ் 5 ரன்களில் போல்டாகினார். இதன் மூலம் 100வது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, 36வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் புதிய சாதனையை படைத்துள்ளார்.
132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனில் கும்ப்ளே 35 முறை 5 விக்கெட்டுகளையும், 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஹர்பஜன் சிங் 25 முறையும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இதனை 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 36 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த டெஸ்ட் தொடரில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலமாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றுள்ளார்.