சென்னை : 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய போது இந்திய அணி தரப்பில் கார்ட் ஆஃப் ஹானர் மரியாதை அளித்த சம்பவம் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் மனம் திறந்துள்ளார்.
இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 14வது வீரர் என்ற பெருமையையும், தமிழ்நாட்டில் இருந்து 100 டெஸ்டில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். இந்த டெஸ்ட் தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 26 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார் அஸ்வின். இந்த நிலையில் தரம்சாலா டெஸ்ட் போட்டி குறித்து யூட்யூபில் பேசியிருக்கிறார்.

அதில், எனது 100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்குவதற்கு முன்பாகவே 2,3 நாட்கள் பில்டப் அதிகமாக இருந்தது. எப்போதும் எந்த பில்டப்பையும் கண்டுகொள்ளவே மாட்டேன். ஆனால் 100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய போது கிடைத்த அன்பும், கொண்டாட்டமும் என்னை நெகிழ செய்துவிட்டது. தரம்சாலா போட்டியில் விளையாட வந்து இறங்கிய போது, வானிலை காரணமாக 2 நாட்கள் பயிற்சி ரத்து செய்யப்பட்டது.
இதன்பின் 5வது டெஸ்ட் போட்டி நடப்பது கடினமான விஷயம் என்றும், பனிப்பொழிவு அதிகமிருக்கும் என்றும் கூறினார்கள். அப்போது வாழ்வின் ஏற்ற இறக்கங்களையும், கிரிக்கெட்டின் ஏற்ற இறக்கங்களையும் ஒப்பிட்டு பார்த்தேன். 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இவ்வளவு தூரம் பயணித்து இங்கு வந்தால், ஆட்டம் நடக்குமா என்று சந்தேகிக்கிறார்களே என்று இருந்தது.
அதன்பின் 100வது டெஸ்ட் போட்டியின் போது பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கைகளில் அந்த கேப்பை பெற்றுக் கொண்டேன். அவரின் பேச்சு குறித்து ஏற்கனவே சொல்லியிருந்தேன். அதில் இன்னொரு ஸ்பெஷல் என்னவென்றால், இந்திய வீரர்கள் தரப்பில் Guard of Honour அளிக்கப்பட்டது. நாங்கள் களமிறங்குவதற்கு முன்பாக ரோகித் சர்மா என்னிடம் வந்தார்.
அப்போது எல்லோரும் தயாராக இருந்த போது என்னிடம் ரோகித் சர்மா, நீ நேரடியாக களத்திற்குள் சென்றுவிடாதே.. உனக்காக ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது.. ஓய்வறை சென்று கொஞ்சம் நடந்துவிட்டு வா என்று கூறினார். ஏதோ சின்னக் குழந்தைக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதை போல் எனக்கு சர்ப்ரைஸ் திட்டமிட்டார்கள். அதன்பின் நான் நடந்து வரும் போது இளம் வீரர்கள் அனைவரும் எனக்காக அணிவகுத்து மரியாதை கொடுத்தார்கள்.
ஒரு மாதிரி மகிழ்ச்சியாக இருந்தது. அதிலும் சிராஜிற்கு எப்போதும் கிண்டல் செய்வதே வேலையாக இருக்கும். சிராஜ் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும், நான் எப்போது விக்கெட் எடுத்தாலும் எப்படி அண்ணா இப்படி பவுலிங் செய்கிறீர்கள் என்று கிண்டல் செய்வார்கள். சூர்யகுமார் யாதவ் இல்லையென்றால் சிராஜும், சிராஜ் இல்லையென்றால் சூர்யகுமார் யாதவும் இதனை செய்வார்கள்.
அவர்கள் இருவரும் சேர்ந்து இருந்தால், நான் அவ்வளவு தான். அவர்களின் கிண்டலை எப்போதும் ரசிப்பேன். கிண்டல் செய்யும் அளவிற்கு என்னுடன் பழகுவார்கள். எங்களுக்குள் அப்படியான உறவு இருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கு எனது பெற்றோர் வர வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாததால், அது நடக்கவில்லை. அப்பாவும் தனித்து வருவது சாதாரணம் கிடையாது என்று கூறினார்.