IND vs ENG: ரெக்கார்ட் புத்தகங்களை உடைத்த ஜடேஜா.. முதல் இந்தியர் என்ற பெருமை
பிர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 23 வது அரை சதத்தை பூர்த்தி செய்து இருக்கின்றார். வெளிநாட்டு மண்ணில் ஜடேஜா பெரிய அளவு சாதிக்கவில்லை என்று ரசிகர்கள் விமர்சித்து வந்தனர்.
கடைசியாக அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் மைதானத்தில் 77 ரன்கள் அடித்தார். அதன் பிறகு ஜடேஜா ஆறு இன்னிங்ஸ்களாக அரை சதம் அடிக்கவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் ஜடேஜா 11 மற்றும் 25 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

இதனால் ஜடேஜாவை நீக்கிவிட்டு அவருக்கு பதில் குல்தீப்பை சேர்க்க வேண்டும் என்று பலரும் விமர்சித்து வந்தனர். இந்த தருணத்தில் இந்திய அணி 210 ரன்களுக்கு ஐந்து விக்கெட் என்ற ஸ்கோரில் தடுமாறியது. அப்போது களத்தில் நின்று கொண்டிருந்த கில்லுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்து அபாரமாக விளையாடினார்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை லாவகமாக எதிர்கொண்ட அவர் தன்னுடைய விக்கெட்டை பறி கொடுக்காமல் ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் கில் மறுமுனையில் நம்பிக்கை பெற்று தன்னுடைய சதத்தை பூர்த்தி செய்தார். இந்த தருணத்தில் 310 ரன்களுக்கு ஐந்து விக்கெட் என்ற ஸ்கோருடன் இரண்டாவது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடங்கியது.
41 ரன்கள் உடன் களத்தில் நின்று கொண்டிருந்த ஜடேஜா தன்னுடைய அரை சதத்தை பூர்த்தி செய்து விளையாடி வருகிறார். இதன் மூலம் பல்வேறு ரெக்கார்டுகளை அவர் முறியடித்திருக்கின்றார்.பிர்மிங்காம் மைதானத்தில் அதிக அரை சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ஜடேஜா இரண்டாவது இடத்தை பிடித்திருக்கின்றார்.
கவாஸ்கர் ஒரு இன்னிங்ஸில் மூன்று முறை 50 ரன்கள் அடித்துள்ள நிலையில் விராட் கோலி, தோனி, ரிஷப் பந்த், ஜடேஜா ஆகியோர் இரண்டு அரை சதங்கள் அடித்திருக்கிறார்கள். இதேபோன்று இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏழாவது மற்றும் அதற்கு கீழ் களமிறங்கும் வீரர்களில் அதிக அரை சதம் அடித்தவர்கள் பட்டியலில் ஜடேஜா தற்போது இரண்டாவது இடத்தை பிடித்திருக்கின்றார்.
ஆஸ்திரேலிய வீரர் 12 அரை சதத்துடன் முதல் இடத்தில் உள்ள நிலையில் ஜடேஜா 7 அரை சதத்துடன் இரண்டாவது இடத்திலும், அஸ்வின் ஆறு அரை சதத்துடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இந்த ரெக்கார்ட் 2010 ஆம் ஆண்டு முதல் கணக்கிடப்படுகின்றது. இதேபோன்று இங்கிலாந்து மண்ணில் பேட்டிங்கில் 700 ரன்களுக்கும் மேலும் பந்துவீச்சில் 25 விக்கெட்டுகள் மேலும் எடுத்த ஒரே இந்திய வீரர் என்ற சாதனையை ஜடேஜா படைத்திருக்கின்றார். பேட்டிங்கில் 739 ரன்களும், பந்துவீச்சில் 28 விக்கெட்டுகளையும் ஜடேஜா இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தி இருக்கின்றார். வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கேரி சோபர்ஸ்,தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் ஜாக் காலிஸ் ஆகியோர் பட்டியலில் ஜடேஜா இணைந்து இருக்கின்றார்.


Click it and Unblock the Notifications