மும்பை : இந்திய அணி 2024 ஆம் ஆண்டு வெறும் மூன்றே மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் தான் விளையாடியது. டெஸ்ட் மற்றும் டி20க்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்த சூழலில் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வரும் 19ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் துபாயில் ஹைபிரிட் மாடல் முறைப்படி நடைபெறுகிறது.
2023 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி கடைசியாக வெற்றி பெற்றது. அதன் பிறகு முதல் வெற்றியைப் பெற வேண்டிய உத்வேகத்தில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி களமிறங்குகிறது.

நாக்பூரில் வியாழக்கிழமை தொடங்கும் இந்த ஆட்டத்தில் பிளேயிங் லெவனில் சி எஸ் கே ஜாம்பவானுக்கு இடம் கிடைக்காது என தமிழக கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "இந்திய ஒரு நாள் அணியில் சில இடங்களில் யாரை தேர்வு செய்வது என்பதில் குழப்பம் நீடிக்கின்றது".
"நான் இந்திய ஒரு நாள் அணியில் ஜடேஜா தேர்வு செய்யப்பட மாட்டார் என நினைத்தேன். ஏனென்றால் அவருக்கு அணியில் தற்போது இடம் இல்லை. இதனால் பிளேயிங் லெவனில் இடம்பெறாத ஒரு வீரருக்கு எப்படி அணியில் இடம் கிடைக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால் தற்போது ஜடஜாவுக்கு இடம் வழங்கியிருப்பதன் மூலம் தற்போது மேலும் சிக்கல் உருவாகி இருக்கிறது"
என்று பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.
தற்போது ஜடஜாவை விட அக்சர் பட்டேல் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ரன்களை சேர்த்து வருகிறார். ஜடஜாவை போல் அவரும் இடது கை சுழற் பந்துவீச்சாளர் என்பதால் பிளேயிங் லெவனில் யாரேனும் ஒருவருக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும். மேலும் ஜடேஜாவை விட அக்சர் பட்டேல் இந்திய டி20 அணியின் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இதனால் அக்சர் பட்டேலுக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைத்தால் ஜடேஜாவுக்கு அணியில் இடம் இருக்காது. அவருக்கு பதில் வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் போன்ற வீரர்கள் பிளேயிங் லெவனில் இடம் பெறுவார்கள். அது மட்டுமில்லாமல் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். இதனால் எந்த வீரர்களை கம்பீரும் ரோகித் சர்மாவும் தேர்வு செய்வார்கள் என்பதில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.