ராஜ்கோட் : இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 73 ஆண்டு கால வரலாற்றை முறியடித்து சாதனை படைத்து அசத்தியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடி வரும் இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் கடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் வெறும் 10 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பின்னர் சுப்மன் கில் 9 பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார்.

இதையடுத்து இளம் வீரர் ரஜத் பட்டிதர் சிறப்பாக ரன் சேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் டாம் ஹார்ட்லி பந்தில் 5 ரன்களில் பெவிலியன் திரும்ப, இந்திய அணியின் ஓய்வறை பதற்றமானது. இதையடுத்து பேட்டிங் வரிசையை மாற்றி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஜடேஜாவை 5வது பேட்ஸ்மேனாக களமிறக்கினார்.
பின்னர் ரோகித் சர்மா - ஜடேஜா இணை இந்திய அணியை மீட்டெடுத்தது. சிறப்பாக ஆடிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 157 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் 11வது சதம் இதுவாகும். அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து அணிக்கு எதிராக 3வது முறையாக சதம் விளாசி அசத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தொடக்க வீரராக இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ரோகித் சர்மா - ஜடேஜா கூட்டணி 204 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், ரோகித் சர்மா 196 பந்துகளில் 3 சிக்ஸ், 14 பவுண்டரி உட்பட 131 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் ரோகித் சர்மா அதிக சிக்சர்கள் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனி 78 சிக்சர் அடித்திருந்த நிலையில், ரோகித் சர்மா 80 சிக்சர்களுடன் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான சதம் விளாசிய வயதான இந்திய கேப்டன் என்ற சாதனையையும் ரோகித் சர்மா படைத்துள்ளார். 1951ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய கேப்டனாக செயல்பட்ட விஜய் ஹசாரே 36 வயது மற்றும் 278 நாட்களில் சதம் விளாசியதே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை ரோகித் சர்மா 36 வயது மற்றும் 291 நாட்களில் சதம் விளாசி 73 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளார்.