ஐதராபாத் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மாவின் கேப்டன்சி சராசரிக்கும் கீழாக இருந்ததாக முன்னாள் வீரர் மைக்கேல் வாஹன் விமர்சித்துள்ளார்.
பேஸ் பால் அணுகுமுறையுடன் களமிறங்கி இந்திய மண்ணில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது இங்கிலாந்து அணி. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் பின் தங்கிய போதும், ஓலி போப்பின் அபார சதம் காரணமாக இங்கிலாந்து அணி மிரட்டலான கம்பேக்கை நிகழ்த்தியது.

அதேபோல் பேட்டிங்கில் எப்படி ஓலி போப் அசத்தலான ஆட்டத்தை விளையாடினாரோ, பவுலிங்கில் அறிமுக வீரர் டாம் ஹார்ட்லி மெர்சலான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். மீண்டும் இந்திய வீரர்கள் அனைவரும் ஒரே பவுலரிடம் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறும் பரிதாபம் நேற்றைய ஆட்டத்தில் நிகழ்ந்தது. இந்திய அணியின் தோல்விக்கு ரோகித் சர்மா டிஃபென்சிவ் மனநிலையே காரணமாக அமைந்துள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன் பேசுகையில், ஐதராபாத் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மாவின் கேப்டன்சி சராசரிக்கும் கீழாக தான் இருந்தது. அவர் ஒவ்வொரு பந்துக்கும் உணர்வுகளை வெளிப்படுத்த தொடங்கினார். அவரின் ஃபீல்ட் செட் மற்றும் பவுலிங் மாற்றங்களிலும் முனைப்புடன் இருந்தது போல் தெரியவில்லை. அதுமட்டுமல்லாமல் ஓலி போப்பின் ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்களுக்கு அவரிடம் பதிலே இல்லாமல் இருந்தது.
ஷேன் வார்னே தான் நான் பார்த்ததில் மிகச்சிறந்த ஸ்பின்னர். யாராவது அவர் பந்தை ஸ்வீப் ஷாட் அடித்தால், அவர் உடனடியாக அரவ்ண்ட் தி ஸ்டம்ப் திசையில் இருந்து பந்துவீச தொடங்குவார். அடுத்த முறை பேட்ஸ்மேன் ஸ்வீப் அடிக்க நினைத்தால், அவரின் விக்கெட்டை வீழ்த்தி குட் லக் சொல்லி கொண்டாடுவார். அதுபோல் எந்த மாற்றங்களையும் இந்திய அணி செய்யவில்லை. அனைவரையும் எளிதாக பவுலிங் செய்தார்கள். அப்படி செய்தால், இங்கிலாந்து அணியால் சாதாரணமாக பவுண்டரிகளை விளாச முடியும்.
அதேபோல் 2012ல் பீட்டர்ன்ச மும்பையில் ஆடிய இன்னிங்ஸை மறக்க முடியாது. அது தான் இங்கிலாந்து பேட்ஸ்மேனால் விளையாடப்பட்ட மிகச்சிறந்த இன்னிங்ஸ் என்று சொல்வேன். மிகச்சிறந்த இந்திய பவுலிங்கை எதிர்த்து ஆக்ரோஷமாக விளாசி தள்ளினார். அந்த இன்னிங்ஸை விடவும் பலமடங்கு சிறந்த இன்னிங்ஸை ஓலி போப் விளையாடிவிட்டார். அவர் ஸ்பின்னர்களை சமாளிக்க சரியான திட்டத்தை கண்டறிந்துவிட்டார் என்று பாராட்டியுள்ளார்.