விசாகப்பட்டினம் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளனர்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் முடிவில் இந்திய அணி வலுவான நிலையில் இருந்தது. முதல் இன்னிங்ஸ் முடிவில் 143 ரன்கள் முன்னிலை பெற்றதோடு, 2வது நாள் முடிவில் விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் 3வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து பவுலர்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் விரக்தியடைய வைப்பதே இந்திய அணிக்கு வெற்றியை தேடி கொடுக்கும் என்று பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் 3வது நாள் ஆட்டத்தை ரோகித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூட்டணி தொடங்கியது. இங்கிலாந்து அணி தரப்பில் ஜோ ரூட் அட்டாக்கை தொடங்கினார். முதல் ஓவரிலேயே ஜோ ரூட் மெய்டன் செய்த நிலையில், 2வது ஓவரை வீச ஆண்டர்சன் அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் 4வது பந்தில் ரோகித் சர்மா டிஃபென்ஸை கடந்து ஆஃப் ஸ்டம்பை தகர்த்தார் ஆண்டர்சன்.
இதனால் ரோகித் சர்மா 13 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் இரட்டை சதம் விளாசிய ஜெய்ஸ்வால் 17 ரன்களில் மீண்டும் ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். 3வது நாளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து இந்திய அணி 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் இந்திய அணி 30 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்ததை இங்கிலாந்து வீரர்கள் ஆரவாரமாக கொண்டாடிய நிலையில், இந்திய ஓய்வறையில் இருந்த ராகுல் டிராவிட் அதிர்ச்சியில் எழுந்து நின்றார். இதன் மூலம் இந்திய அணியின் கைகளில் இருந்த ஆட்டம் இங்கிலாந்து பக்கம் திரும்பியுள்ளது. ஏற்கனவே முதல் போட்டியில் 190 ரன்கள் முன்னிலை எடுத்த போதும், அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது.
இதனால் 2வது இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் கவனமாக விளையாடவில்லை என்றால் மீண்டும் பேஸ் பால் அணுகுமுறை காரணமாக இன்னொரு ஆட்டத்தில் தோல்வியை சந்திக்க நேரிடும். பிட்சில் பெரியளவில் உதவி இல்லாத போதும், இங்கிலாந்து பவுலர்களை எதிர்த்து இந்திய பேட்ஸ்மேன்கள் தடுப்பாட்டத்தில் ஈடுபடுவது ரசிகர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.