நாக்பூர் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 2023 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை அரை இறுதி ஆட்டத்திற்கு பிறகு இந்திய அணி தற்போது தான் சர்வதேச ஒருநாள் போட்டியில் வெற்றியைப் பெற்றுள்ளது.
அது மட்டுமில்லாமல் கேப்டன் ரோகித் சர்மா கடந்த 6 போட்டிகளில் கேப்டனாக ஒரு வெற்றியை கூட பெறாத நிலையில் தற்போது தான் முதல் வெற்றியை பெற்றிருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரோஹித் சர்மா, "ஒரு நாள் கிரிக்கெட்டில் நீண்ட நாட்கள் கழித்து நாங்கள் விளையாடி இருக்கிறோம்".

"இதனால் முடிவு மகிழ்ச்சியை தருகிறது. ஒருநாள் கிரிக்கெட்டில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நாங்கள் இந்த தொடருக்கு முன்பு உரையாடினோம். இங்கிலாந்தின் தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடி எங்களுக்கு நெருக்கடி கொடுத்தார்கள். ஆனால் நாங்கள் மீண்டும் ஆட்டத்திற்குள் வந்தது நல்ல விஷயம்".
"ஒரு நாள் கிரிக்கெட் என்பது கொஞ்சம் நீண்ட போட்டி ஆகும். இதில் உங்களால் நிச்சயம் கம்பேக் கொடுக்க முடியும். எல்லா விஷயங்களும் நம்மை விட்டு செல்கிறது என்று நினைத்தால், அது தொடர்கதையாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. நாங்கள் முக்கிய கட்டத்தில் விக்கெட்டுகளை எடுத்தோம். எங்களுடைய பில்டர்கள் அபாரமாக செயல்பட்டார்கள்".
"களத்தில் வலது கை, இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்க வேண்டும் என்பதற்காக தான் அக்சர் பட்டேலை ஐந்தாவது வீரராக களம் இறக்கினோம். இங்கிலாந்து அணியிடம் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இதனால் களத்தில் ஒரு இடது கை பேட்ஸ்மேன் இருக்க வேண்டும் என்று நினைத்தோம்".
"அக்சர் பட்டேல் தற்போது பேட்ஸ்மேனாக முன்னேறி இருக்கிறார். அதனை இன்று நாம் கண்கூடாக பார்த்தோம். போட்டியில் எங்களுக்கு ஒரு பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது.அதனை கில்லும், அக்சர் பட்டேல் சிறப்பாக செய்தார்கள். சாம்பியன்ஸ் கோப்பை தொடர்க்கு என நாங்கள் தனியாக தயாராகவில்லை. நாங்கள் செய்ய வேண்டிய விஷயத்தை தொடர்ந்து சரியான முறையில் செய்ய வேண்டும்".
"எங்கள் அணியில் என்ன குறைகள் இருக்கிறது. எந்த விஷயத்தை சரி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் இந்த தொடரில் நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம். எனினும் கடைசி நேரத்தில் நாங்கள் விக்கெட்டுகளை இழந்து இருக்கக் கூடாது. அதை நாங்கள் சரி செய்ய வேண்டும்" என்று கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். கடைசி நேரத்தில் அக்சர் பட்டேல், ராகுல் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததை மறைமுகமாக ரோகித் சர்மா சாடி இருக்கிறார்.