மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தாலும் ரோகித் சர்மாவுக்கு தற்போது போதாத காலமாக இருக்கிறது. டி20 உலக கோப்பையை வென்ற பிறகு இந்திய கிரிக்கெட்டில் சக்தி வாய்ந்த நபராக ரோகித் சர்மா, ஆனால் 6 மாதத்தில் அவருடைய பவர் சரிந்தது.
இதற்கு காரணம் ரோகித் சர்மா கேப்டன் ஆகவும் ஒரு பேட்ஸ்மேன் ஆகவும் களத்தில் சரியாக செயல்படாதது தான் என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இதனால் ரோகித் சர்மா சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இதிலிருந்து ரோகித் சர்மா தப்பித்து மரியாதையுடன் வெளியேற வேண்டும் என நினைத்தால், அவர் தன்னுடைய பேட்டிங்கில் மீண்டும் ரன் குவிக்க வேண்டும். மேலும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியை வெற்றி பெற வைக்க வேண்டும். இது இரண்டும் நடந்தால் மட்டுமே ரோகித் சர்மா உச்சத்தில் செல்ல முடியும்.
இந்த சூழலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெறும் 31 ரன்கள் மட்டுமே அடித்த ரோகித் சர்மா, ஒருநாள் கிரிக்கெட்டில் ஃபார்ம்க்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் ஒருநாள் போட்டியில் வெறும் இரண்டு ரன்களில் ஆட்டம் இழந்தார்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை கட்டாக்கில் நடைபெற உள்ள இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா பெரிய ரன்கள் குவிக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இந்த சூழலில் கட்டாக்கில் ரோகித் சர்மா இதுவரை எத்தனை போட்டிகளில் விளையாடி இருக்கிறார் என்பதை தற்போது பார்க்கலாம். கட்டாக்கில் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட்டுகளில் ரோகித் சர்மா வெறும் மூன்று போட்டிகளில் தான் விளையாடி இருக்கிறார்.
இதில் மொத்தமாக அவர் 143 ரன்கள் அடித்திருக்கிறார். சராசரி 71 என்ற அளவில் ஸ்ட்ரைக் ரேட் 83 என்ற அளவில் இருக்கிறது. இதில் ரோகித் சர்மா இரண்டு அரை சதம் அடித்திருக்கிறார்.இதில் ஒன்று வெஸ்ட் இண்டீஸ் எதிராக 99 பந்துகளில் 72 ரன்கள் அடித்திருக்கிறார். இதேபோன்று 2019 ஆம் ஆண்டு ரோஹித் சர்மா இதே மைதானத்தில் 63 பந்துகளுக்கு 63 ரன்கள் இலங்கைக்கு எதிராக அடித்துள்ளார். இதில் 8 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும்.
2008 ஆம் ஆண்டு இதே மைதானத்தில் ரோகித் 10 பந்துகளை எதிர் கொண்டு ஆட்டமிழக்காமல் எட்டு ரன்கள் அடித்திருந்தார். இதேபோன்று ரோகித் சர்மா இங்கு இரண்டு சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிருக்கிறார். 2015 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிராக 24 பந்துகளில் 22 ரன்களும், 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 13 பந்துகளில் 17 ரன்களும் அடித்திருக்கிறார். இதனால் ரோகித் சர்மா இந்த மைதானத்தில் ஓரளவுக்கு நல்ல ஆட்டத்தையே வெளிப்படுத்தி இருக்கிறார். இதனால் ரோகித் சர்மா மீண்டும் தனது இழந்த பார்மை கட்டாக்கில் மீட்பரா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.