IND vs ENG : எனக்கு வயசாகிருச்சா.. இங்கிலாந்து ஜாம்பவானுக்கு தரமான பதிலடி கொடுத்த ரோகித் சர்மா!
தரம்சாலா : ரோகித் சர்மா வயதினை வைத்து இங்கிலாந்து ஜாம்பவான் ஜெஃப்ரி பாய்காட் விமர்சித்த நிலையில், 4 போட்டிகளில் 2 சதங்களை விளாசி பதிலடி கொடுத்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றிருந்தது. அப்போது இங்கிலாந்து ஜாம்பவான்கள் பலரும், இந்திய மண்ணிலும் பேஸ் பால் அணுகுமுறை வென்றது. இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த இதுவே சரியான தருணம் என்று ஆவேசமாக பேச தொடங்கினார்கள்.

அதிலும் இங்கிலாந்து ஜாம்பவான் ஜெஃப்ரி பாய்காட், ஒருபடி மேல் சென்று ரோகித் சர்மாவை விமர்சிக்க தொடங்கினார். ரோகித் சர்மாவுக்கு 37 வயதாகிவிட்டது. அவர் தனது பிரைம் பேட்டிங்கை கடந்துவிட்டார். அவர் மிகச்சிறந்த கேமியோ ஆட்டங்களை விளையாடி இருந்தாலும், கடந்த 4 ஆண்டுகளில் வெறும் 2 சதங்களை மட்டுமே விளாசி இருக்கிறார் என்று விமர்சித்தார்.
எதிரணியின் கேப்டனை மனதளவில் தடுமாற வைப்பதும் மூலமாக இந்திய அணியையும் தடுமாற வைக்க முடியும் என்பதே இங்கிலாந்து ஜாம்பவான்களின் யுக்தியாக இருந்தது. இந்த நிலையில் ஜெஃப்ரி பாய்காட் விமர்சனத்திற்கு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது பேட்டிங் மூலமாக பதிலடி கொடுத்துள்ளார்.
9 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 2 சதங்கள், ஒரு அரைசதம் உட்பட 400 ரன்களை விளாசி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் 30 வயதை கடந்தபின் அதிக சதங்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சாதனையையும் சமன் செய்துள்ளார். 30 வயதினை கடந்த பின் சச்சின் டெண்டுல்கர் 35 சதங்களை விளாசி இருக்கிறார்.
அதேபோல் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியதன் மூலமாக ரோகித் சர்மா 35வது சதத்தை விளாசி உள்ளார். இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 12 சதமும், ஒருநாள் கிரிக்கெட்டில் 31 சதமும், டி20 கிரிக்கெட்டில் 5 சதங்களையும் ரோகித் சர்மா விளாசியுள்ளார். இதனால் ரோகித் சர்மாவால் இன்னும் சில ஆண்டுகள் மிகச்சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்த முடியும் என்று நிரூபித்துள்ளார்.


Click it and Unblock the Notifications