IND vs ENG: ரோகித் சர்மாவால் முடிவுக்கு வந்த கேப்டன் கில் அதிரடி.. தப்பித்த ஹிட்மேன்
கார்டிஃப்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கார்டிஃப் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. பர்மிங்ஹாமில் நடைபெற்ற முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, இத்தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களம் இறங்கியுள்ளது.
இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடி களம் இறங்கியது. ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய ஓவரில் ரோஹித் சர்மா கொடுத்த கடினமான கேட்ச் வாய்ப்பை இங்கிலாந்து வீரர் கஸ் அட்கின்சன் தவறவிட்டார். இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திய ரோஹித் நிதானமாக விளையாடத் தொடங்கினார். மறுமுனையில் சுப்மன் கில் தனது அபாரமான பேட்டிங் திறமையால் நேர்த்தியான பவுண்டரிகளை விளாசி ரன் வேகத்தை உயர்த்தினார்.

ஒரு கட்டத்தில் ரோகித் சர்மாவின் மெதுவான ஆட்டம், கில்லுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியதால், அவர் அதிரடியை தொடர்ந்தார். மிகவும் சிறப்பாக விளையாடி வந்த சுப்மன் கில், 26 பந்துகளில் 31 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். கஸ் அட்கின்சன் வீசிய 8-வது ஓவரின் நான்காவது பந்தை கில் டிரைவ் செய்ய முயன்றபோது, கவரில் நின்றிருந்த பென் டக்கட் பாய்ந்து பிடித்தார். இதனால் இந்திய அணி 44 ரன்களுக்குத் தனது முதல் விக்கெட்டை இழந்தது.
கில்லின் ஆட்டமிழப்பைத் தொடர்ந்து, நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி மைதானத்திற்குள் நுழைந்து ரோஹித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார். கடந்த அக்டோபர் 2025 முதல் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மிகச்சிறந்த ஃபார்மில் இருக்கும் கோலி, 10 போட்டிகளில் 3 சதங்கள் மற்றும் 3 அரைசதங்களுடன் 77.62 சராசரியில் 621 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி தற்போது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications

