லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அபாரமாக பேட்டிங் செய்து போட்டியை டிரா செய்தனர். ஒரு கட்டத்தில் போட்டியை முன்கூட்டியே முடித்துக் கொள்ளலாம் என இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் கூற, அதற்கு ஜடேஜா மறுப்பு தெரிவித்துவிட்டார்.
காரணம் இருவரும் சத்தத்தை நெருங்குவதால், அதை அடித்து விட்டு சமன் செய்யலாம் என்று ஜடேஜா கூறினார். இதற்கு ஸ்டோக்ஸ் கடுப்பாகி தன்னுடைய விரக்தியை வெளிப்படுத்தினார்.மேலும் ஹாரி புரூக் இடம் அவர் பந்து வீச கூறினார். அப்போது, உங்களுக்கு சதம் தானே அடிக்க வேண்டும்.

இந்தா அடித்துக் கொள் என்பது போல் அல்வா பந்துகளை வீசி பார்வையாளர்களை வெறுப்பேற்றினார். எனினும் இதை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாத ஜடேஜா, அதனை பவுண்டரி, சிக்சர் என அடித்து விரைவாக சதத்தை எட்டினார். இந்த நிலையில் ஹாரி புரூக் பந்து வீசிய விதம் கேவலமாக இருந்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசிய போது, ஹாரி புரூக் பந்து வீச வந்தார். ஆனால் அவர் மிகவும் கேவலமாக செயல்பட்டார். அவர் ஆப் ஸின் வீசுகிறேன் என்று மிக மோசமாக செயல்பட்டார்.அவருடைய பந்துவீச்சு நிச்சயமாக ஒரு வெட்கக்கேடான விஷயமாக இருந்தது.உங்களுக்கு வேகப்பந்து வீசத் தெரியும் தானே, பின் ஏன் பந்தை தூக்கி எறிந்தீர்கள். ஏதோ ஏழைகளின் டான் லாரன்ஸ் போல் அவருடைய பந்துவீச்சு இருந்தது.
போட்டியை விரைவாக முடித்துவிட்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே அவர் பந்து வீசியது போல் தெரிந்தது என்று பிராட் தெரிவித்துள்ளார். இதனிடையே மிகவும் எளிதாகப் பந்து வீசி எதிரணி ரன்கள் அடிக்கட்டும் என்பது போல் செயல்பட்ட ஹாரி புரூக் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.