ஐதராபாத் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியிருப்பது ரசிகர்களை மட்டுமல்லாமல் முன்னாள் வீரர்களையும் கடுப்படைய செய்து இருக்கிறது. இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணம் என்ன என்பது குறித்து பல விவாதங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த வகையில் குறிப்பாக ரோகித் சர்மா தன்னுடைய கேப்டன்சியில் மெத்தனமாகவும் பேட்டிங்கில் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் இருந்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபோன்று கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தாமல் இருப்பதும் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் அணில் கும்ப்ளே, இங்கிலாந்து அணி கடைசி இரண்டு நாட்களில் மிகவும் சிறப்பாக விளையாடியது. இந்தியாவின் ஆட்டம் மிகவும் சாதாரணமாக இருந்தது. இந்திய வீரர்கள் பீல்டிங் செய்யும் போது அவர்களுடைய உடல் மொழியை பார்த்தாலே நமக்கு களத்தில் என்ன நடந்தது என்பது தெரிகின்றது. இங்கிலாந்துக்கு தான் என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
அறிமுக வீரரான டாம் ஹார்ட்லி தன்னுடைய முதல் பந்திலேயே சிக்ஸர் விட்டுக் கொடுத்தார். முதல் இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டுகளை தான் வீழ்த்தினார். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் செயல்பட்ட விதம் பிரமிக்க வைக்கிறது என்று கும்ப்ளே கூறினார். இதனை தொடர்ந்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பார்த்தீவ் பட்டேல், சுப்மன் கில் ஆடிய விதம் எனக்கு கவலையை அளிக்கிறது.
கில் அடித்த ஆட வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை. நீங்கள் ரன் சேர்க்க முயற்சி செய்யாமல் இருந்தால் சர்வதேச அளவில் பவுலர்கள் உங்களுக்கு மோசமான பந்துகளை வீசவே மாட்டார்கள். குறைந்த பட்சம் கில் சிங்கிள்ஸ் எடுக்க முயற்சி செய்ய வேண்டும். பேட்டிங் யுத்தியை உடனடியாக கில்லால் மாற்ற முடியாது. ஆனால் தன்னுடைய மனதையும் அணுகு முறையையும் மாற்றி ரன் சேர்க்க முடியும் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய ஜாஹிர் கான் கில் முதல் இன்னிங்சில் இருந்தே அழுத்தத்திற்கு ஆளானார்.
ஒரு நாள், டி20 போட்டிகளில் கில் ஏற்கனவே தன்னுடைய திறமையை நிரூபித்து இருக்கிறார். ஆனால் அதைப்போல் ஒரு ஆட்டத்தை டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிப்படுத்த தடுமாறி வருகிறார். மூன்றாவது இடத்தில் களமிறங்கும் பேட்ஸ்மேன் அணியின் இன்னிங்சை கட்டமைக்க வேண்டும். ஆனால் அதை நாம் கில்லிடமிருந்து பார்க்கவே முடிவதில்லை.
இதிலிருந்து கடும் அழுத்தம் கில்லுக்கு ஏற்பட்டிருக்கிறது தெரிகிறது. அதை அவர் எப்படி எதிர்கொள்ள போகிறார் என்பதில் தான் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை அமைந்திருக்கிறது. என்னைக் கேட்டால் கில்லுக்கு இந்திய அணி நிர்வாகம் தொடர்ந்து வாய்ப்பு வழங்கும் என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.