IND VS ENG 2nd Test : இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் எடுத்திருக்கும் முடிவுக்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
இந்த நிலையில் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்குகிறது. இந்த நிலையில் அணியில் கே எல் ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோர் இல்லாததால் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ராகுல் டிராவிட் தள்ளப்பட்டிருந்தார்.

ரஞ்சி கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி தனது வாய்ப்புக்காக 6 ஆண்டுகள் காத்திருந்த நிலையில் முதல்முறையாக இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே விராட் கோலி,கேஎல் ராகுல் போன்ற வீரர்கள் இல்லாததால் சர்பிராஸ்கானுக்கு இம்முறை வாய்ப்பு கண்டிப்பாக வழங்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
சர்பிராஸ்கான் நடு வரிசையில் அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க கூடிய வீரர் இங்கிலாந்து போன்ற பந்துவீச்சுக்கு கடும் நெருக்கடியை அவருடைய பேட்டிங் ஸ்டைல் கொடுக்கும். இதனால் சர்பிராஸ்கானுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிளேயிங் லெவனில் சப்ராஸ்கானுக்கு இடம் வழங்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் ராகுல் டிராவிட்டை கடுமையாக சாடி வருகிறார்கள். அறிமுக வீரராக ரஜத் பட்டிதாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அவர் ஒரு நல்ல வீரர். அவரும் வாய்ப்புக்காக நீண்ட நாட்களாக காத்திருந்தார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் தொடர்ந்து இந்திய அணியில் சொதப்பி வரும் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்பட்டது என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
கில் இன்றைய ஆட்டத்தில் அதிரடியாக விளையாடுகிறேன் என்ற பெயரில் 34 ரன்களில் ஆட்டம் இழந்தார். அவர் அரை சதம் அடித்து நீண்ட நாட்களாகி விட்டது. இதனை குறிப்பிட்டு தொடர்ந்து கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ராகுல் டிராவிட் வாய்ப்பு வழங்குவதில் பின்னணி என்ன என்று கேள்வி கேட்டு வருகிறார்கள். ஏற்கனவே டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் பெயர் பெற்றுள்ள இருவரையும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தேவையில்லாமல் அழைத்து வந்து அவமானப்படுத்துவது ஏன் என்றும் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என தனியாக வீரர்களை தயார் படுத்தாத வரையில் இந்திய அணி இதுபோன்று தடுமாறும் என்றும் ரசிகர்கள் கூறியுள்ளனர். இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றாலும் கூட ராகுல் டிராவிட் செய்தது மிகப்பெரிய தவறு என்றும் சர்பிராஸ் கானுக்கு அடுத்த போட்டியிலாவது வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.