லண்டன்: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா? இல்லையா? என்பது குறித்த அளவுக்கு அதிகமான கவனம் தேவையற்றது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிரெக் சேப்பல் கூறியுள்ளார். ஒரு தனிப்பட்ட வீரரை மட்டும் அணி நிர்வாகம் அதிகமாக நம்பியிருப்பது சரியான அணுகுமுறை அல்ல என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஒரு அணியின் வெற்றி என்பது தனிப்பட்ட வீரரின் திறமையால் மட்டும் கிடைப்பதில்லை, அது ஒரு கூட்டு முயற்சி என்று சேப்பல் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், "பும்ரா ஆடுகிறாரா இல்லையா என்பதைப் பற்றியே அதிகம் பேசப்படுகிறது. ஆனால், சமீபத்தில் அவர் இல்லாமலேயே இந்தியா பல டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது என்பதை நாம் கவனிக்க வேண்டும்."
"இங்கு தனிப்பட்ட திறமையை விட, அணியின் கூட்டு முயற்சியே முக்கியம். ஒவ்வொரு வீரரும் தங்களது பணியை சரியாக செய்யும் போது தான் அணி வெற்றி பெறும். கேப்டன் ஒவ்வொரு வீரருக்கும் அவர்களது பங்கு என்ன என்பதை தெளிவாக உணர்த்தி, நம்பிக்கையையும், திட்டத்திற்கான அர்ப்பணிப்பையும் உறுதி செய்ய வேண்டும், அதுவே வெற்றிக்கான ரகசியம்" என்று கூறியுள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், ஒரு சிறந்த டெஸ்ட் கேப்டனாக தனது முத்திரையை பதிக்க விரும்பினால், தனது கேப்டன்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இதுவே சரியான தருணம் என்றும் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டனான சேப்பல் அறிவுறுத்தியுள்ளார்.
இது பற்றி பேசுகையில், "கில் ஒரு சிறந்த டெஸ்ட் கேப்டனாக உருவாக விரும்பினால், இதுவே அவரது அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கான தருணம். பேட்டிங்கில் மட்டுமல்ல, தனது கேப்டன்சியிலும் அவர் முத்திரை பதிக்க வேண்டும். அணிக்கான தரத்தை நிர்ணயித்து, அதை வீரர்களிடம் இருந்து எதிர்பார்க்க வேண்டும். சரியான அணியைத் தேர்ந்தெடுத்து, வீரர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்."
"ஒவ்வொரு வீரருக்கும் அவரிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதை உறுதி செய்து, அதை அவர்களிடம் இருந்து பெற வேண்டும். இறுதியில், கிரிக்கெட் என்பது ஹீரோக்களைப் பற்றியது அல்ல, அது பார்ட்னர்ஷிப்கள், அணிகள் மற்றும் தங்களைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்து சிறந்ததை வெளிக்கொணரும் கேப்டன்களைப் பற்றியது" என்றும் சேப்பல் கூறினார்.
இதனிடையே, இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் பும்ரா மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் முன்னதாக தெளிவுபடுத்தியிருந்தார். இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், பும்ராவின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு இந்த திட்டமிடல் செய்யப்பட்டதாகவும் கம்பீர் கூறியிருந்தார்.
இந்நிலையில், முன்னாள் இங்கிலாந்து வீரர் டேவிட் லாயிட், பும்ரா இல்லாத போட்டிகளில் இந்தியாவின் வெற்றி, தோல்வி குறித்த புள்ளிவிவரம் ஆச்சரியமளிப்பதாக கூறியுள்ளார். பும்ரா விளையாடும் போட்டிகளை விட, அவர் இல்லாத போட்டிகளில் இந்தியா அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளது என்ற புள்ளிவிவரம் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ஜூலை 23 ஆம் தேதி தொடங்கவுள்ளது. தற்போது தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கும் நிலையில், இந்திய அணி தொடரை சமன் செய்ய இந்த போட்டியில் வெற்றி பெறுவது அவசியமாகியுள்ளது. எனவே, பும்ராவின் பங்களிப்பு குறித்த விவாதங்கள் தொடர்ந்து முக்கியத்துவம் பெற்று வருகின்றன.