பிர்மிங்காம்: இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி முன்பே ஒரு ரகசியத்தை வெளியே சொல்லிவிட்டதாகவும், அதை வைத்து இங்கிலாந்து அணி முன்னேற்பாடுகளைச் செய்து இந்திய அணியை எளிதாக சமாளிக்கும் என்றும் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடருக்கான அணித் தேர்வின் போதே, இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்தத் தொடரின் ஐந்து போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்ற விஷயம் சொல்லப்பட்டுவிட்டது.

அப்போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிலேயே தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகார்கர் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இந்த விஷயத்தை வெளிப்படையாகச் சொல்லிவிட்டனர். ஆனால், இதை எதற்காக முன்பே சொல்ல வேண்டும்? இது இங்கிலாந்து அணிக்குச் சாதகமாக மாறிவிடாதா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.
இந்திய அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளராக இருப்பவர் பும்ரா. இங்கிலாந்து அணி பயப்படுவதும் அவரைப் பார்த்துதான். ஆனால், அவர் இந்த தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என்ற தகவல் முன்பே சொல்லப்பட்டுவிட்டால், இங்கிலாந்து அணி அதைப்பயன்படுத்தி, அவர் விளையாடாத போட்டிகளுக்கான பிட்ச்களை அவர்களுக்குச் சாதகமாக உருவாக்குவார்கள். அதாவது, வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமான பிட்ச்களை உருவாக்குவார்கள்.
அப்போது பும்ரா இல்லாமல் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு பலவீனமாக இருக்கும். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு அந்தப் பிட்ச்சைப் பயன்படுத்தும். இந்திய அணியில் பும்ரா இல்லாததால் மற்ற பந்துவீச்சாளர்கள் அதை பெரிதாகப் பயன்படுத்த வாய்ப்பில்லை என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார் ஆகாஷ் சோப்ரா.
இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில், "பும்ரா மூன்று போட்டிகளில் தான் விளையாடுவேன் என்று முன்பே உங்களிடம் (இந்திய அணி நிர்வாகத்திடம்) சொல்லிவிட்டார். ஆனால், இதைப் பொது வெளியில் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? ஏன் இதை ரகசியமாக வைத்திருக்கக் கூடாது? நாம் போட்டியில் விளையாடுவதற்கு முன் பிளேயிங் லெவனையும் அறிவிப்பதில்லை. எனவே, எதற்காக இந்தத் தொடர் துவங்குவதற்கு முன்பு இருந்து இடைவிடாமல் பும்ரா மூன்று போட்டிகளில் தான் விளையாடுவார் என்பதைச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்? இதை வெளியே சொல்லாமல் இங்கிலாந்து அணியை நாம் சிந்திக்க விட்டிருக்க வேண்டும்."
"பும்ரா எத்தனை போட்டிகளில் வேண்டுமானாலும் விளையாடலாம், ஆனால் அதை வெளியே சொல்லக் கூடாது. இப்போது அவர் ஒரு போட்டியில் விளையாடிவிட்டார். மீதமுள்ள நான்கு போட்டிகளில் இரண்டு போட்டிகள் தான் விளையாடுவார். அவர் அடுத்த போட்டியில் விளையாடிவிட்டால் கடைசி மூன்று போட்டிகளில் ஒன்றில் மட்டும் தான் விளையாடுவார். அப்போது எதிரணி பும்ரா இல்லாததைப் பயன்படுத்தி அதற்கேற்றவாறு பிட்ச்களை உருவாக்குவார்கள்" என்றார்.
மேலும், "அடுத்த தலைமுறை வீரர்கள் பும்ரா இல்லாத நேரத்தில் முன்வந்து விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்" எனவும் ஆகாஷ் சோப்ரா குறிப்பிட்டார். அதுதான் இங்கே சிக்கலை உருவாக்கி உள்ளது.