லீட்ஸ்: இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் இடையே பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ஜஸ்பிரித் பும்ரா. அப்போது தனக்கு எதிராக பேசியவர்களையும், எழுதியவர்களையும் சுட்டிக்காட்டி விளாசினார். அவர் இந்திய அணியின் பந்துவீச்சாளராக வந்தபோது "இன்னும் ஆறு மாதங்கள் அல்லது எட்டு மாதங்கள் தான் பும்ராவால் பந்து வீச முடியும்; அவரது பந்துவீசும் முறை காரணமாக அவருக்கு காயம் ஏற்படும்" என்றெல்லாம் பலரும் சுட்டிக்காட்டினர். தற்போது அதைப்பற்றி பேசியிருக்கும் பும்ரா அவர்களை விளாசித் தள்ளினார்.
இது பற்றி பும்ரா பேசியதாவது: "மக்கள் என்ன எழுதுகிறார்கள் என்பது எனது கட்டுப்பாட்டில் இல்லை. ஒவ்வொருவருக்கும் அதை நான் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது. என்னை பற்றி இப்படி எழுதாதீர்கள், இப்படி எழுதுங்கள் என அவர்களுக்கு நான் பாடம் எடுக்க முடியாது. என்ன எழுத வேண்டும் என நினைக்கிறார்களோ, அதை எழுதுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு.

நமது நாட்டில் கிரிக்கெட் மிகவும் பிரபலமாக உள்ளது. எனவே தலைப்புச் செய்தியில் எனது பெயரை எழுதினால் அவர்களுக்கு பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அதை நான் புரிந்துகொண்டு இருக்கிறேன். ஆனால், எனக்கு அது முக்கியமல்ல. அவற்றை எனது தலைக்குள் நான் ஏற்றுக்கொண்டால், அதை நான் உண்மையாக நம்ப ஆரம்பித்து விடுவேன். என்னை பொறுத்தவரை நான் யார், நான் எதை நம்புகிறேன் என்பதுதான் எனக்கு முக்கியம். நான் செய்யும் வேலைகளை அதுதான் முடிவு செய்ய வேண்டும்.
மற்ற ஒருவர் நான் எப்படி விளையாட வேண்டும் என்பதை முடிவு செய்தால், அதை ஏற்றுக் கொள்ளும் நபர் நான் இல்லை. எனது தயாரிப்புகள், எனது யோசனைகள் அவை அனைத்துமே இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதை வைத்துதான் அமைகிறது. எனது சொந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் நான் கிரிக்கெட் விளையாடி வருகிறேன். ஒவ்வொரு கிரிக்கெட் வடிவத்திலும் அந்த நம்பிக்கைகளை வைத்துதான் விளையாடி வருகிறேன்.
முதலில் சில பேர் என்னிடம் சொன்னார்கள், 'உன்னால் ஆறு மாதங்கள் அல்லது எட்டு மாதங்களுக்கு மேல் தாக்குப்பிடித்து ஆட முடியாது' என்று கூறினார்கள். ஆனால் நான் விளையாடுகிறேன், விளையாடுகிறேன், விளையாடிக்கொண்டே இருக்கிறேன். நான் இப்போது சர்வதேச கிரிக்கெட்டில் பத்தாண்டுகளை நிறைவு செய்யப் போகிறேன். ஐபிஎல் தொடரில் நான் 12 அல்லது 13 ஆண்டுகளாக விளையாடி வருகிறேன்.
ஆனால் இப்போதும் சிலர் 'இவர் இத்துடன் வெளியேறுவார், ஓய்வு பெற்றுவிடுவார்' என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் அப்படியே காத்திருக்கட்டும். அதைப் பற்றி எல்லாம் நான் சிந்திப்பதில்லை. நான் எனது வேலையை செய்கிறேன். ஒவ்வொரு மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை சிலர் 'இவர் சென்றுவிடுவார், இதோ சென்றுவிடுவார்' என்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.
கடவுள் என்ன எழுதி இருக்கிறாரோ, அதுவரை நான் விளையாடுவேன். எனது சிறந்த பங்களிப்பை அளிப்பேன். அதன் பிறகு மற்றவற்றை கடவுளிடம் விட்டு விடுவேன். அவர் எனக்கு அளித்திருக்கும் ஆசீர்வாதத்தால் நான் தொடர்ந்து முன்னேறி செல்கிறேன். இந்திய கிரிக்கெட்டையும் என்னுடன் முன்னே அழைத்துச் செல்ல விரும்புகிறேன்" இவ்வாறு பும்ரா பேசினார்.