ஹாராரே: 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி சதமும், இந்திய பந்துவீச்சாளர்களின் கூட்டு முயற்சியும் இந்தியாவின் இந்த இமாலய வெற்றிக்கு வித்திட்டன. ஆறாவது முறையாக இந்திய அணி அண்டர் 19 உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது.
ஜிம்பாப்வேயில் உள்ள ஹாராரே மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஆயுஷ் மத்ரே முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் ஜார்ஜ் 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஆனால், அடுத்து வந்த வைபவ் சூர்யவன்ஷி ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்த அவர், மைதானத்தில் சிக்ஸர் மழை பொழிந்தார்.
குறிப்பாக 17வது ஓவரில் அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்களைப் பறக்கவிட்டு இங்கிலாந்து வீரர்களை உறைய வைத்தார். அந்த ஓவரில் மட்டும் 22 ரன்கள் எடுக்கப்பட்டன. வெறும் 55 பந்துகளில் தனது சதத்தைப் பூர்த்தி செய்த வைபவ், தொடர்ந்து அதிரடி காட்டினார். அவர் 80 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 15 சிக்ஸர்களுடன் 175 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
கேப்டன் ஆயுஷ் மத்ரே (53), விக்கெட் கீப்பர் அபிகியான் குண்டு (40) மற்றும் கடைசி நேரத்தில் கனிஷ்க் சௌஹான் (37) ஆகியோர் ரன் குவிக்க, 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் என்ற பிரம்மாண்ட ஸ்கோரை எட்டியது.
412 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டாக்கின்ஸ் (66) சிறப்பான தொடக்கம் தந்தார். இருப்பினும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன.
ஒரு கட்டத்தில் தோல்வி உறுதி என்று நினைத்தபோது, இங்கிலாந்து வீரர் காலேப் ஃபால்கோனர் இந்திய பந்துவீச்சாளர்களுக்குத் தண்ணீர் காட்டினார். தனி ஆளாகப் போராடிய அவர், இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கி 67 பந்துகளில் 115 ரன்கள் (9 பவுண்டரி, 7 சிக்ஸர்) குவித்தார். அவரது ஆட்டம் இந்திய அணிக்குச் சற்று அழுத்தத்தை ஏற்படுத்தியது.
இருப்பினும், இந்திய பந்துவீச்சாளர்கள் சரியான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். ஆர்.எஸ். அம்ப்ரிஷ் 3 விக்கெட்டுகளையும், தீபேஷ் தேவேந்திரன் மற்றும் கனிஷ்க் சௌஹான் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இறுதியில் இங்கிலாந்து அணி 40.2 ஓவர்களில் 311 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய ஜூனியர் அணி, உலகக்கோப்பையை உச்சி முகர்ந்தது. 175 ரன்கள் குவித்த வைபவ் சூர்யவன்ஷி ஆட்டநாயகனாக ஜொலித்தார்.