மும்பை: 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த வெற்றியைக் கொண்டாடி வரும் வேளையில், ஆட்டநாயகன் விருது யாருக்கு வழங்கப்பட்டது என்பது குறித்து சமூக வலைத்தளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் புதிய விவாதம் ஒன்று எழுந்துள்ளது. 89 ரன்கள் குவித்த சஞ்சு சாம்சனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டாலும், அந்த விருது உண்மையில் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்திய ஜஸ்பிரித் பும்ராவுக்குத்தான் வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பேட்ஸ்மேன்கள் முழு ஆதிக்கத்தைச் செலுத்தினார்கள் என்றே கூற வேண்டும். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 253 ரன்கள் குவித்தது. அதனைத் துரத்திய இங்கிலாந்து அணி 246 ரன்கள் வரை வந்து தோல்வியைத் தழுவியது. இரு அணிகளும் சேர்ந்து ஏறக்குறைய ஐந்நூறு ரன்களைக் குவித்தன. இந்தியத் தரப்பில் சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 89 ரன்கள் விளாசினார். இங்கிலாந்து தரப்பில் இளம் வீரர் ஜேக்கப் பெத்தேல் 48 பந்துகளில் 105 ரன்கள் குவித்து மிரட்டினார்.

இப்படிப்பட்ட சூழலில், இரு அணி பந்துவீச்சாளர்களும் ஓவருக்குச் சராசரியாக 10 ரன்களுக்கும் அதிகமாகவே வாரி வழங்கினர். ஆனால், இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா மட்டுமே ஓவருக்கு 10 ரன்களுக்கும் குறைவாக விட்டுக்கொடுத்துப் பந்துவீசினர். ஹர்திக் பாண்டியா 4 ஓவர்களில் 38 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் பும்ரா 4 ஓவர்களில் 33 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார். விக்கெட் கணக்கை மட்டும் வைத்துப் பார்த்தால் இது சாதாரணமாகத் தெரியலாம். ஆனால், ஆட்டத்தின் போக்கை மாற்றியது பும்ரா தான்.
இங்கிலாந்து அணி வெற்றி பெறக் கடைசி 5 ஓவர்களில் 69 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் ஜேக்கப் பெத்தேல் நின்றிருந்ததால் இங்கிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. அந்த இக்கட்டான நேரத்தில் 16வது ஓவரை வீசிய பும்ரா வெறும் 8 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். அடுத்து 17வது ஓவரில் அர்ஷ்தீப் சிங் 16 ரன்களைக் கொடுத்தார். மீண்டும் 18வது ஓவரை வீச வந்த பும்ரா, செட் ஆன பேட்ஸ்மேன்கள் களத்தில் இருந்தும் வெறும் 6 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
ரன் வேகம் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்த இங்கிலாந்து அணிக்கு, பும்ரா வீசிய இந்த இரண்டு ஓவர்கள் கடும் அழுத்தத்தை ஏற்படுத்தின. இந்த அழுத்தத்தின் காரணமாகவே, அடுத்து 19வது ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியாவால் வெறும் 9 ரன்களைக் கொடுத்து விக்கெட்டையும் வீழ்த்த முடிந்தது. பும்ரா ஏற்படுத்திக் கொடுத்த அந்த நெருக்கடிதான் ஹர்திக் பாண்டியாவையும், கடைசி ஓவரில் இந்திய அணியையும் காப்பாற்றியது. எனவே, ரன்களை வாரி வழங்கிய மற்ற பந்துவீச்சாளர்களுக்கு மத்தியில், சிக்கனமாகப் பந்துவீசி ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் திருப்பிய பும்ராவுக்கே ஆட்டநாயகன் விருது பொருத்தமாக இருந்திருக்கும் என்பது ரசிகர்களின் வாதம்.

ஆட்டநாயகன் விருதை வென்ற சஞ்சு சாம்சனும் இதே கருத்தைத்தான் முன்வைத்தார். விருது வழங்கும் விழாவில் பேசிய அவர், "இந்த விருது உண்மையில் ஜஸ்பிரித் பும்ராவுக்குத்தான் சேர வேண்டும். அவர் ஒரு தலைசிறந்த பந்துவீச்சாளர். அவர் அந்த நேரத்தில் அப்படிப் பந்துவீசவில்லை என்றால், வெற்றி பெற்ற அணியின் வீரராக நான் இங்கு நின்றிருக்க முடியாது" என்று வெளிப்படையாகப் பேசினார்.
புள்ளிவிவரங்களின் அடிப்படையில் சஞ்சு சாம்சன் அல்லது ஜேக்கப் பெத்தேல் போன்றோர் அதிக ரன்கள் குவித்திருந்தாலும், ஆட்டத்தின் முடிவைத் தீர்மானித்தது பும்ராவின் துல்லியமான பந்துவீச்சுதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
