ஐதராபாத் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் டெஸ்ட் ஹைதராபாத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இங்கிலாந்து அணி அதிரடியாக ஆடி ரன்களை குவிக்க முற்பட்ட நிலையில் இந்திய பவுலர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி பதிலடி தந்தனர். தொடக்க வீரராக களம் இறங்கிய ஜாக் கிராலி 20 ரன்களும் பென் டக்கட் 35 ரன்களும் எடுக்க அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் சேர்த்தார்.

இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 64.3 ஓவர்கள் எல்லாம் இங்கிலாந்து அணி இந்த ஸ்கோரை எட்டி இருக்கிறது. இதனை அடுத்து இந்திய அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸ் தொடங்கியது. இந்திய வீரர்கள் அதிரடியாக விளையாடி இங்கிலாந்தின் பேஸ் பால் திட்டத்திற்கு பதிலடி கொடுத்தார்கள்.
இந்திய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாட வேண்டும் என்றால் இப்படித்தான் ரன்களை சேர்க்க வேண்டும் என இங்கிலாந்து வீரர்களுக்கு ஜெய்ஸ்வாலும் ரோகித் சர்மாவும் பாடம் எடுத்தனர். ரோகித் சர்மா ஒரு முனையில் கொஞ்சம் அமைதி காக்க இளம் கன்று பயம் அறியாது என்பது போல் ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக பட்டையை கிளப்பினார்.
சேவாக்கும் கங்குலியும் கலந்த பேட்ஸ்மேன் போல் ஜெய்ஸ்வால் விளையாடினார். ஜெய்ஸ்வால் 47 பந்துகளில் எல்லாம் அரை சதம் கடந்தார். இதில் ஏழு பவுண்டரிகளும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 6.3 ஓவர்கள் எல்லாம் 50 ரன்கள் கடந்தது. பத்து ஓவரில் 68 ரன்களை கடந்த இந்திய அணி அபாரமாக விளையாடி வருகிறது. இதனால் இங்கிலாந்து அணியின் ஸ்கோரை இந்தியா விரைவில் முந்திவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.