ராஜ்கோட்: "டாப் ஆர்டர் சரிந்தால் என்ன? நான் இருக்கிறேன்" என்று சொல்லாமல் சொல்லி, ராஜ்கோட் மைதானத்தில் தனி ஆளாக நின்று இந்திய அணியின் மானத்தைக் காப்பாற்றியுள்ளார் கே.எல். ராகுல். விக்கெட்டுகள் மளமளவென விழுந்த நேரத்தில், நங்கூரமாய் நின்று சதம் விளாசிய ராகுலால், இந்திய அணி கௌரவமான ஸ்கோரை எட்டியுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில், கே.எல். ராகுலின் (112*) பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்களைக் குவித்துள்ளது. டாஸ் தோற்று பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோஹித் சர்மா 24 ரன்கள், விராட் கோலி 23 ரன்கள் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் 8 ரன்கள் என சீனியர் வீரர்கள் அடுத்தடுத்து ஏமாற்றம் அளித்தனர்.

ஒருபுறம் கேப்டன் சுப்மன் கில் அதிரடியாக ஆடி 53 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்தாலும், அவரும் ஜேமிசன் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, இந்தியா 118 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
200 ரன்களையாவது இந்தியா தாண்டுமா என்ற பயம் எழுந்தபோதுதான் கே.எல். ராகுல் - ரவீந்திர ஜடேஜா ஜோடி இணைந்தது. அவசரப்படாமல் நிதானமாக ரன்களைச் சேர்த்த இந்த ஜோடி, 5-வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ஜடேஜா 44 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து பிரேஸ்வெல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுபக்கம் கே.எல். ராகுல் தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 92 பந்துகளைச் சந்தித்த அவர், 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 112 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 121.74 என்பதாக இருந்தது.
இளம் வீரர் நிதிஷ் குமார் ரெட்டி 20 ரன்கள் எடுத்து ராகுலுக்கு ஒத்துழைப்பு கொடுக்க, இருவரும் இணைந்து ஸ்கோரை 250-க்கு மேல் கொண்டு சென்றனர். கடைசி ஓவர்களில் முகமது சிராஜ் ராகுலுக்குத் ஸ்ட்ரைக் கொடுக்க, அணியின் ஸ்கோர் 284-ஐ எட்டியது.
நியூசிலாந்து தரப்பில் கிறிஸ்டியன் கிளார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், 8 ஓவர்களில் 56 ரன்களை வாரி வழங்கினார். கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் 10 ஓவர்கள் வீசி வெறும் 34 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி சிக்கனமாகப் பந்துவீசினார்.
ஆரம்பத்தில் தடுமாறிய இந்திய அணி, ராகுலின் இந்த "ஆல் இன் ஆல்" ஆட்டத்தால் நியூசிலாந்துக்கு 285 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்தது.