ராஜ்கோட்: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் கடைசி ஓவர் வரை சென்று த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணி, 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்த போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது. பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியாக கருதப்படும் ராஜ்கோட் மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட், வானிலை நிலவரம் மற்றும் அணியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து இங்கே விரிவாகப் பார்ப்போம்.

ராஜ்கோட் நிரஞ்சன் ஷா கிரிக்கெட் மைதானம் என்றாலே அது பேட்ஸ்மேன்களுக்குக் கொண்டாட்டம் தான். இங்குள்ள ஆடுகளம் மிகவும் தட்டையாகவும், கடினமாகவும் இருப்பதால் பந்து பேட்டிற்கு மிக நன்றாக வரும். பவுன்ஸ் சீராக இருக்கும் என்பதால், பேட்ஸ்மேன்கள் பயமின்றி அதிரடியாக ஷாட்களை ஆடலாம்.
வேகப்பந்து வீச்சாளர்களுக்கோ அல்லது சுழற்பந்து வீச்சாளர்களுக்கோ இங்கு பெரிதாக எந்த உதவியும் கிடைக்காது என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆடுகளம் முழுக்க முழுக்க பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதால், இந்த போட்டியில் நிச்சயம் "ரன் மழை" பொழிவதை எதிர்பார்க்கலாம்.
ராஜ்கோட் மைதானத்தில் இதுவரை 4 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. ஆச்சரியம் என்னவென்றால், இந்த 4 போட்டிகளிலுமே முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. சேஸிங் செய்வது இங்கு சற்று கடினமாக இருக்கலாம் என்பதால், டாஸ் வெல்லும் கேப்டன் கண்ணை மூடிக்கொண்டு பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கும். சராசரி ஸ்கோர் 300-க்கு மேல் செல்லும் வாய்ப்புள்ளது.
முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும், ஒரு சோகமான செய்தியும் வந்தது. ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக எஞ்சியுள்ள ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காகவும், டெல்லி உள்ளூர் அணிக்காகவும் கலக்கிய இளம் வீரர் ஆயுஷ் பதோனி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சுழற்பந்து வீச்சு மற்றும் அதிரடி பேட்டிங் என இரண்டிலும் கைக்கொடுப்பார் என்பதால், அவர் இந்த போட்டியில் களம் காண அதிக வாய்ப்புள்ளது.
ராஜ்கோட்டில் இன்று வானம் தெளிவாக இருக்கும். மழை பெய்வதற்கான வாய்ப்பு 0% மட்டுமே. ஈரப்பதம் குறைவாக இருப்பதால் பந்து காற்றில் ஸ்விங் ஆவது கடினம். இதுவும் பேட்ஸ்மேன்களுக்கே சாதகமாக அமையும். முழுமையாக 50 ஓவர்களும் எவ்வித தடையுமின்றி நடைபெறும்.
நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை பல முக்கிய வீரர்கள் இல்லாதது அவர்களுக்குப் பின்னடைவே. ஆனால் இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, கில், ஸ்ரேயாஸ் ஐயர் என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் செம ஃபார்மில் உள்ளனர். ராஜ்கோட் போன்ற பேட்டிங் பிட்சில் இவர்கள் விஸ்வரூபம் எடுத்தால், நியூசிலாந்து பவுலர்கள் திணறுவது உறுதி.
ரோஹித் சர்மா, சுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஆயுஷ் பதோனி, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
டெவோன் கான்வே, ஹென்றி நிக்கோல்ஸ், வில் யங், டேரில் மிட்செல், மிட்ச் ஹே (விக்கெட் கீப்பர்), மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), கிளென் பிலிப்ஸ், சாக் ஃபௌல்க்ஸ், கைல் ஜேமிசன், கிறிஸ்டியன் கிளார்க், ஆதித்யா அசோக்.