கவுகாத்தி: நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.இந்த சூழலில் மூன்றாவது டி20 போட்டி கௌகாத்தியில் இன்று தொடங்கி இருக்கிறது.
பனிப்பொழிவு அதிகம் இருக்கும் என்பதால் டாஸ் வென்ற கேப்டன் சூரியகுமார் முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஆடுகளும் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. பனிப்பொழிவு அதிகம் இருக்கும் என்பதால் நாங்கள் இன்று முதலில் பந்து வீச முடிவு எடுத்து இருக்கின்றோம்.

முதல் இரண்டு போட்டிகளிலும் நாங்கள் நன்றாக செயல்பட்டு இருக்கிறோம். செய்ய வேண்டிய விஷயத்தை சரியாக திரும்ப செய்து நன்றாக கிரிக்கெட் விளையாட வேண்டும். அதே சமயம் பணிவுடன் களத்தில் செயல்பட வேண்டும். சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அபிஷேக் ஆகியோர் பந்துவீச்சில் சில ஓவர்கள் வீசுவது கேப்டனாக எனக்கு பெரிய பிளஸ் ஆக நான் பார்க்கின்றேன்.
இன்றைய ஆட்டத்தில் நாங்கள் இரண்டு மாற்றங்களை செய்திருக்கின்றோம். ஆர்ஸ்தீப் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் ஓய்வில் இருக்கிறார்கள். அவர்களுக்கு பதிலாக பும்ரா மற்றும் ரவி பிஸ்னாய் திரும்பியிருக்கின்றனர் என்று சூரிய குமார் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பேசிய நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சாட்னர், நாங்கள் கடந்த போட்டியில் பேட்டிங்கில் நன்றாக செயல்பட்டோம்.
பந்துவீச்சில் கூட ஓகே தான். நாங்கள் பலமான அணியாக இன்றைய போட்டிகள் திரும்பி வருவோம். எந்த விஷயத்தில் கவனம் செலுத்தி தோல்வியில் இருந்து மீண்டு முன்னேற வேண்டும் என்பதுதான் எங்களுடைய குறிக்கோள். இது புதிய போட்டி, புதிய மைதானம். எனவே நாங்கள் வெற்றிக்காக மீண்டும் போராடுவோம். எங்கள் அணியில் இன்று நீஷம் விளையாடுவதாக இருந்தார். ஆனால் அவர் கடைசி நேரத்தில் விளையாட முடியவில்லை. போக்ஸ் பதிலாக ஜிமிசன் அணியில் திரும்பி இருக்கின்றார் என கூறினார்.