IND vs NZ: அபிஷேக் சர்மாவை அணியை விட்டு நீக்க சொன்னவங்க இப்போ எங்க போனீங்க? இர்பான் பதான் கேள்வி
வெலிங்டன்: நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா 38 பந்துகளில் 113 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது இந்த அதிரடி ஆட்டத்தைப் பாராட்டிய முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் இர்பான் பதான், உலகக் கிரிக்கெட்டில் மிகவும் ஆபத்தான பேட்டர்களில் அபிஷேக்கும் ஒருவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
சில போட்டிகளில் சரியாக விளையாடாதபோது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரை உடனடியாக குறி வைப்பதாகச் சுட்டிக்காட்டிய பதான், அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும் அவர் மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்துள்ளதாகக் கூறினார்.

தனது யூடியூப் சேனலில் பேசிய இர்பான் பதான், "சிறிய தவறு நடந்தாலும் அவரை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று சிலர் விரும்புகிறார்கள். இது குறிப்பாக சமூக வலைதளங்களில் தான் நடக்கிறது. அணி நிர்வாகத்தையோ அல்லது தேர்வாளர்களையோ நான் குறிப்பிடவில்லை. அபிஷேக் தான் தங்களின் முதன்மை வீரர் என்பதில் அவர்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்."
"வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர் சிறப்பாகச் செயல்படுகிறார். உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது அவர் சரியாக ஆடாத போதும் நான் அவரை ஆதரித்துப் பேசினேன். உலகிலேயே மிகவும் பயமற்ற சிறந்த ஹிட்டர் அவர்தான். ஆஃப்-சைடில் அவர் பந்துகளை அடிக்கும் விதம் நம்பமுடியாததாக உள்ளது" என்று கூறினார்.
அபிஷேக் சர்மாவின் சிறப்பம்சங்கள் குறித்துப் பேசிய இர்பான் பதான், "அவருக்கு ஒரே மாதிரியான லைனில் பந்துவீசி, ஆஃப்-சைடில் ஆட வாய்ப்பளித்தால் அவர் பந்துவீச்சாளர்களை விட்டுவைக்க மாட்டார். அதனால் தான் அவருக்குப் பந்துவீசுவது மிகவும் கடினம். ஆடுகளம் மெதுவாக இல்லையென்றால் அல்லது பந்துவீச்சாளர்கள் தங்கள் லைனைத் தொடர்ந்து மாற்றாவிட்டால் அவரைத் தடுப்பது சாத்தியமில்லை. நியூசிலாந்து மண்ணில் இந்திய பேட்டர் சதம் அடிப்பது சாதாரண விஷயமல்ல. இது ஒரு அபூர்வ சாதனை" என்று பதான் தெரிவித்தார்.
முந்தைய இரண்டு போட்டிகளில் 29 மற்றும் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த அபிஷேக் சர்மா, இந்த போட்டியில் அதை பிரம்மாண்ட சதமாக மாற்றினார். நியூசிலாந்து நிர்ணயித்த 199 ரன்கள் என்ற சவாலான இலக்கை இந்திய அணி 13.2 ஓவர்களிலேயே 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எட்டிப் பிடித்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 3-0 என முன்னிலை பெற்றுள்ளது.இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.


Click it and Unblock the Notifications


