துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவும் நியூசிலாந்தும் நாளை சம்பிரதாய ஆட்டமாக கடைசி லீக் போட்டியில் மோதுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் ஏ பிரிவில் முதல் இடத்தில் நிறைவு செய்யும்.
இந்த நிலையில் ஐசிசி தொடர்களில் நியூசிலாந்தை எதிர்கொள்ள இந்தியா கவலைப்படும் என்று அந்த நாட்டின் முன்னாள் கிரிக்கெட் தலைமை செயல் அதிகாரி டேவிட் ஒயிட் தெரிவித்திருக்கிறார். நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் சிஇஓ ஆக டேவிட் ஒயிட் இருந்தபோது அந்த அணி மூன்று உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

அது மட்டுமல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் கைப்பற்றியது. தற்போது சாம்பியன் டிராபி தொடரில் அரையிறுதிக்கு நியூஸிலாந்து சென்றுள்ள நிலையில் கருத்து தெரிவித்துள்ள டேவிட் ஒயிட், பொதுவாக இந்தியாவிற்கு எதிராக நியூசிலாந்து அணி ஐசிசி தொடர்களில் நல்ல ரெக்கார்ட் வைத்திருக்கிறது. எனினும் கடந்த உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியாவிற்கு எதிராக நாம் தோல்வியை தழுவினாலும், அந்தப் போட்டியும் இந்தியாவுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது.
அந்தப் போட்டியில் மிட்செல் அபாரமாக சதம் அடித்தார் என நினைக்கின்றேன். தற்போது நடைபெறும் ஆட்டமும் சிறப்பானதாக தான் இருக்கும். இரு அணிகளும் சமபலம் வாய்ந்தவை என்பதால் போட்டி கடும் சவாலை தரும். இரண்டு அணிகளும் நல்ல முறையில் விளையாடுவார்கள் என நம்புகிறேன். நான் 2012 ஆம் ஆண்டு பொறுப்பை ஏற்ற போது பிரண்டன் மெக்குல்லம்மை கேப்டனாக நியமித்தேன்.
இதேபோன்று பயிற்சியாளராக மைக் ஹேசனையும் நியமித்தோம். அதன் பிறகு நியூசிலாந்து கிரிக்கெட்டின் பாதையே மாறியது. மெக்குல்லம் அணியை சிறப்பாக வழி நடத்தினார். தற்போது அவர் இங்கிலாந்து அணியையும் எவ்வாறு வழிநடத்தி முன்னுக்கு கொண்டு சென்றார் என்று அனைவருக்கும் தெரியும். நாங்கள் ஒவ்வொரு வீரர்களின் செயல் திறனை மேம்படுத்த தனி ஒரு திட்டத்தையே உருவாக்கினோம்.
மேலும் எங்கள் அணியில் பல திறமை வாய்ந்த வீரர்கள் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்கள். 2015 உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு சென்றது பெரிய சாதனையாக நான் கருதுகிறேன். இதைப் போன்று 2019 இறுதிப்போட்டியில் நாங்கள் தோல்வியை தழுவினோம். அந்த தோல்வி இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. எனினும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வென்றது மறக்க முடியாதது. நியூசிலாந்து கிரிக்கெட்டுக்கு இது பொற்காலம் என்று டேவிட் ஒயிட் பாராட்டியுள்ளார்.