துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா தொடர்ந்து மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் 50 ஓவர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி, டி20 உலக கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி என கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில் இந்திய அணி தற்போது சிறப்பாக விளையாடுவதற்கு தோனி போட்ட விதை தான் காரணம் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளி விஜய் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாக பிரமாதமான ஒரு கிரிக்கெட்டை விளையாடி வருகிறது."

"அனைத்து வீரர்களும் நல்ல ஃபார்மிலும், நல்ல உடல் தகுதியுடனும் இருக்கிறார்கள். இந்திய கிரிக்கெட் தற்போது முன்னோக்கி செல்கிறது. நம்மை விட மற்ற அணிகள் பின்தங்கி இருக்கிறார்கள் என்பதே நிதர்சனம். சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி இந்திய அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்."
"இந்திய அணி நிச்சயமாக கோப்பையை வெல்லும். இந்த தொடரில் ஒரு முறை கூட தோற்காமல் கோப்பையை வெல்வது என்பது சாதாரண விஷயம் கிடையாது. தற்போது இருக்கும் இந்திய அணி வீரர்கள் அனைவரும் சுதந்திரமாக விளையாடுகிறார்கள். விராட் கோலியிடம் ரன் அடிக்க வேண்டும் என்ற பசி இருக்கிறது. ஸ்ரேயாஸ் அதிரடியாக ஆட வேண்டும் என்ற எண்ணத்தில் விளையாடுகிறார்."
"இதையெல்லாம் இந்திய அணி தொடர்ந்து செய்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் தோனி தான். இந்தியா இவ்வளவு புதிய வகை கிரிக்கெட் விளையாடுவதற்கு தோனி எங்களுக்கு அப்போதே ஃபார்முலாவை போட்டுவிட்டு சென்றுவிட்டார்.தோனி சொன்னதை தான் கோலி, தற்போது ரோஹித் என பலரும் முன்னெடுத்துச் செல்கிறார்கள். எதிரணியை பார்த்து பயந்த காலமெல்லாம் போய்விட்டது. மனதளவில் இந்திய அணி வீரர்கள் வேறொரு பரிணாமத்திற்கு சென்று இருக்கிறார்கள்."
"இதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கின்றது. வருண் சக்கரவர்த்தி இன்னும் சில காலத்தில் உலகில் மிகச் சிறந்த பவுலராக வருவார். அதற்கான திறமை, மனவலிமை அனைத்தும் அவரிடம் இருக்கின்றது. நாட்டுக்காக விளையாடும்போது கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இதை தான் வருண் சக்கரவர்த்தி செய்து வருகிறார். இதனை அவர் மேலும் பல ஆண்டுகள் செய்வார் என நம்புகிறேன். தமிழ்நாட்டில் இருந்து ஒரு வீரர் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடுவதை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று முரளி விஜய் தெரிவித்துள்ளார்.