துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிச்சுற்று போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. துபாயில் நடைபெறும் இந்த போட்டியில் ஆடுகளம் எவ்வாறு இருக்கும் என்பது தான் தற்போது கேள்வியாக இருந்திருக்கிறது.
துபாய் ஆடுகளம் மிகவும் தோய்வாக இருப்பதால் பேட்டிங் கொஞ்சம் கடினமாக இருக்கிறது. இந்த சூழலில் ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் மோதிய அரை இறுதி ஆட்டத்திற்கு ஆடுகளம் ஓரளவுக்கு பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது.

இந்த சூழலில் இறுதி போட்டியில் இரு அணிகளும் மாற்றம் செய்ய வாய்ப்பு இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், இரண்டு அணிகளுமே இறுதிப்போட்டியில் தங்களுடைய பிளேயிங் லெவனை மாற்றினார்கள் என்றால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். ஏனென்றால் ஆடுகளம் எவ்வாறு இருக்கிறது என்பதை பொறுத்து தான் அனைத்துமே தீர்மானிக்கப்படும்.
அரையிறுதிக்கு ஆஸ்திரேலியா இந்தியா அணிகள் மோதிய ஆட்டத்திற்கு வழங்கப்பட்ட ஆடுகளம் திருப்திகரமாக இருந்தது. இந்த தொடரிலே அதுதான் பெஸ்ட் என்று நான் கூறுவேன். தற்போது மைதான பணியாளர்களுக்கு ஐந்து நாள் நேரம் இருந்திருக்கிறது. இதனை பயன்படுத்தி மீண்டும் ஒரு நல்ல ஆடுகளத்தை அவர்களால் தயாரிக்க முடியும்.
மீண்டும் 280 -300 ரன்கள் அடிக்கும் அளவுக்கு ஆடுகளத்தை கொடுப்பார்களா இல்லை மீண்டும் ஆடுகளம் தோய்வாக இருக்குமா என்பது பற்றி யோசிக்க வேண்டும். எனினும் தேவையில்லாமல் அணியின் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதுதான் என்னுடைய கருத்தாக இருக்கின்றது. இறுதிப் போட்டியில் ஏதேனும் ஒரு ஆல் ரவுண்டர்தான் ஆட்டநாயகன் விருதை பெறுவார் என நினைக்கின்றேன்.
அது அக்சர் பட்டேலாக இருக்கலாம். ஜடேஜாவாக கூட இருக்கலாம். இல்லையெனில் நியூசிலாந்து வீரர் கிளன் பிலிப்ஸ் ஆக கூட இருக்கலாம். பிலிப்ஸ் அபாரமான வீரராக இருக்கின்றார். பில்டிங், பேட்டிங் என அனைத்திலுமே பட்டையை கிளப்புகிறார். பேட்டிங்கில் அவர் அதிவிரைவாக 40, 50 ரன்கள் எடுக்கின்றார். பந்துவீச்சிலும் விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். விராட் கோலி வில்லியம்சன், ரச்சின் ரவீந்தரா போன்ற வீரர்கள் இறுதிப்போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.
இதனால் அவர்கள் முதல் 10 ரன்கள் எடுப்பதற்குள் ஆட்டம் இழக்க வைத்தால் உங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது. 10 ரன்களுக்கு மேல் அடித்தால் நிச்சயம் அந்த வீரர்கள் பெரிய ஸ்கோர் அடிக்க வாய்ப்பு இருக்கின்றது. இந்தியாவை வீழ்த்தக்கூடிய ஒரு அணி இருக்கிறது என்றால் அது நியூசிலாந்து தான். மேலும் இறுதிப் போட்டியில் இந்திய அணி தான் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக தெரிகிறது.