IND vs NZ: “2 மாதமாக சச்சின் சார் செய்த ரகசிய உதவி”.. தொடர்நாயகன் சஞ்சு சாம்சன் உருக்கம்
அகமதாபாத்: 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி மூன்றாவது முறையாகச் சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தப் போட்டியில் 46 பந்துகளில் 89 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்ட சஞ்சு சாம்சன், 'தொடர் நாயகன்' விருதை வென்றார். விருது பெற்ற பிறகு பேசிய அவர், தனது வெற்றிக்குக் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் செய்த ரகசிய உதவி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
கனவு நனவான தருணம்
தொடர் நாயகன் விருதைப் பெற்றுக் கொண்டு பேசிய சஞ்சு சாம்சன், "இது ஒரு கனவு உலகத்தில் இருப்பது போன்ற உணர்வைத் தருகிறது. மிகவும் மகிழ்ச்சியாகவும், நன்றியுடனும் உணர்கிறேன். என் உணர்வுகளை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை. இந்தத் தருணத்திற்காகத் தான் நான் நீண்ட காலமாக உழைத்து வந்தேன்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இதற்கான விதை ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே விழுந்துவிட்டது. கடந்த 2024 உலகக் கோப்பை அணியில் நான் இருந்தும், போட்டிகளில் விளையாடும் அணியில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போதிருந்தே, நான் உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடுவது போலவும், கோப்பையை வெல்வது போலவும் தொடர்ந்து மனதிற்குள் காட்சிப்படுத்திப் பார்த்துக்கொண்டே இருந்தேன். அதற்கான பலன் இன்று கிடைத்துள்ளது" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
உடைந்த மனதும் கடவுளின் திட்டமும்
தனது கடந்த காலச் சறுக்கல்கள் குறித்துப் பேசிய அவர், "நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் நான் சரியாக விளையாடாதபோது, என் மனம் முழுமையாக உடைந்து போனது. என் கனவுகள் அனைத்தும் சிதறிவிட்டதாக நினைத்தேன். அடுத்து என்ன செய்வது என்றே தெரியாமல் தவித்தேன். ஆனால், கடவுள் எனக்காக வேறு ஒரு பெரிய திட்டத்தை வைத்திருந்தார்.
எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், தைரியமாகக் கனவு காண்பதைக் கைவிடக் கூடாது என்பதற்கு நானே சாட்சி. அந்தக் கனவு காண்பதற்கான துணிச்சல் எனக்கு இருந்ததால் தான், இன்று இந்தக் கோப்பை என் கையில் உள்ளது" என்று உருக்கமாகத் தெரிவித்தார். இந்தத் தொடரில் சஞ்சு சாம்சன் ஹாட்ரிக் அரைசதங்கள் (97*, 89, 89) அடித்துத் தனது பழைய விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கரின் ரகசிய உதவி
தனது இந்த அசுர வளர்ச்சிக்குப் பின்னால் சச்சின் டெண்டுல்கர் இருப்பதாகச் சஞ்சு சாம்சன் ஒரு ரகசியத்தை உடைத்தார். "எனது இந்தக்கட்டான நேரத்தில் முன்னாள் வீரர்கள் பலர் என்னைத் தொடர்பு கொண்டு உதவினர். குறிப்பாக, கடந்த இரண்டு மாதங்களாக நான் சச்சின் டெண்டுல்கர் சார் உடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தேன்.
அவரிடம் பலமுறை நீண்ட நேரம் உரையாடினேன். அவரைப் போன்ற ஒரு ஜாம்பவானிடமிருந்து ஆலோசனையும், வழிகாட்டுதலும் கிடைப்பதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அதைவிடப் பெரியது வேறு எதுவும் இல்லை. எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி" என்று கூறினார்.
மேலும் தனது எதிர்காலத் திட்டம் பற்றிக் கேட்டபோது, "இந்தத் தருணம் எனக்கு மிகப் பெரியது. இப்போது இந்த வெற்றியை முழுமையாகக் கொண்டாட விரும்புகிறேன். இன்னும் சில நாட்களுக்குப் பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து யோசிப்பேன்" என்று கூறி விடைபெற்றார்.


Click it and Unblock the Notifications