துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் இன்று துபாயில் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 2:30 மணிக்கு தொடங்குகிறது. இந்த தொடரில் துபாய் ஆடுகளத்தில் தான் இந்திய அணி அனைத்து போட்டிகளையும் விளையாடியது.
இதனால் இந்தியா ஒரே மைதானத்தில் விளையாடுவதால் இந்தியாவுக்கு கூடுதல் சாதகம் ஏற்பட்டிருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டி இருக்கிறார்கள். ஆனால் துபாயில் இருக்கும் ஆடுகளம் கடும் சவால்களை கொடுப்பதாக இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவும் பதிலடி கொடுத்திருந்தார்.

இந்த சூழலில் ரோகித் சர்மா தொடர்ந்து டாஸ்களை இழந்து வருகிறார். இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் டாஸ் வெல்லும் அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆம், துபாய் ஆடுகளம் மிகவும் தோய்வாக இருக்கிறது. குறிப்பாக மதியம் நேரத்தில் பந்து பேட்டிற்கு தாமதமாக வருகிறது.
ஆனால் இரவு நேரத்தில் ஆடுகளம் கொஞ்சம் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறுகிறது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீசுவது சிறந்த முடிவாக இருக்கும். ஆனால் லீக் சுற்றில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வெற்றியை பெற்றது. அதற்கு காரணம் வருண் சக்கரவர்த்தி தன்னுடைய அபாரமான செயல்பாட்டை வெளிப்படுத்தி நியூசிலாந்துக்கு நெருக்கடி கொடுத்தது தான்.
இல்லையென்றால் நியூசிலாந்து அந்த போட்டியில் எளிதில் வெற்றி பெற்றிருக்கும். மேலும் இறுதிப் போட்டிக்கு இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடிய போட்டியின் போது பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் தான் தற்போது கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கூட இந்திய அணி இரண்டாவது பேட்டிங் செய்து தான் வெற்றி பெற்றது.
ஒருவேளை டாசை இழந்தால் பெரிய அளவு கவலை கொள்ளவும் தேவையில்லை. முதலில் இந்திய அணி பேட்டிங் செய்ய பணிக்கப்பட்டால் ரோகித் சர்மாவும் கில்லும் முதல் பத்து ஓவர் வரை விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ரோகித் சர்மாவும், கில்லும் எவ்வளவு நேரம் களத்தில் நிற்கிறார்களோ, அவ்வளவும் இந்தியாவுக்கு நல்லது.
முதல் 20 ஓவரில் இந்திய அணி 120 ரன்களை தாண்டி விட வேண்டும். இப்படி நடக்கும் பட்சத்தில் கண்டிப்பாக முதலில் பேட்டிங் செய்து 300 ரன்கள் இந்தியாவால் எடுக்க முடியும். அது இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும். ஒருவேளை நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தால் அவர்களை 250 ரன்களில் சுருட்ட வேண்டும்.