IND vs NZ: புவனேஸ்வர் குமாருக்கு கூடுதல் நேரம் தாங்க.. அணியை விட்டு நீக்காதீங்க- முகமது கையிப்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ள வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாருக்குச் சிறிது காலம் அவகாசம் அளிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேசப் போட்டிக்குத் திரும்பியுள்ள அவர், களம் இறங்கிய உடனேயே முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்துவார் என்று எதிர்பார்ப்பது நடைமுறைக்குச் சாத்தியமற்றது என கைஃப் குறிப்பிட்டுள்ளார்.
தனது யூடியூப் சேனலில் இது குறித்துப் பேசிய முகமது கைஃப், புவனேஷ்வர் குமார் இதுவரை இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார் என்பதால், அவரை இப்போதே மதிப்பிடுவது அவசர முடிவாக இருக்கும் என்று கூறினார். மேலும், "நான்கு ஆண்டுகளில் கிரிக்கெட் விளையாட்டு பல மாற்றங்களைக் கண்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கும் இந்திய அணிக்காக சர்வதேச அளவில் விளையாடுவதற்கும் பெரிய வேறுபாடு உள்ளது. நியூசிலாந்தில் பந்து அதிக அளவில் ஸ்விங் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அங்கு பேட்டிங்கிற்குச் சாதகமான சூழலே நிலவுகிறது" என்று அவர் விளக்கினார்.
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் 49 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் எதுவும் எடுக்காமலும், இரண்டாவது போட்டியில் 50 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டும் மட்டுமே புவனேஷ்வர் குமார் வீழ்த்தியிருந்தார். அவரது பந்துவீச்சு அதிக ரன்களைக் கொடுத்தது குறித்துப் பேசிய கைஃப், புவனேஷ்வர் குமார் தனது நோ-பால் பிரச்சனையை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
போட்டியில் நான்கு ஓவர்களில் 50 ரன்கள் என காட்டினாலும், ஒவ்வொரு ஓவராகப் பிரித்துப் பார்த்தால் அவரது பந்துவீச்சு மோசமாக இல்லை என்றும் கைஃப் தெரிவித்தார்.அதேநேரத்தில், இரண்டாவது டி20 போட்டியில் மயங்க் யாதவுக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட இளம் வேகப்பந்து வீச்சாளர் பிரின்ஸ் யாதவின் சிறப்பான செயல்பாட்டை முகமது கைஃப் வெகுவாகப் பாராட்டியுள்ளார். இந்த சூழலில் வரும் செவ்வாய் அன்று நடைபெறும் மூன்றாவது டி20 போட்டியில் புவனேஸ்வர் குமார் அணியில் இருப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications


