மும்பை: உலகக்கோப்பை தொடரின் முதற்கட்ட போட்டிகளில் சொதப்பிய போது என் மீதான விமர்சனங்கள் அதிகரித்த போது எழுந்த கோபத்தை வெளிக்காட்டவில்லை என்று இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் டாப் ஆர்டர் வீரர்களே முன்னிலையில் உள்ள நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 2 சதங்கள் மற்றும் 3 அரைசதங்கள் என்று மொத்தமாக 526 ரன்களை விளாசி அசத்தியுள்ளார். அதில் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு மிகமுக்கிய காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் அமைந்துள்ளார்.

ஒருவேளை முகமது ஷமி 7 விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை என்றால், ஆட்ட நாயகன் விருது ஸ்ரேயாஸ் ஐயருக்கு வழங்கப்பட்டிருக்கும். ஏனென்றால் விராட் கோலி ஒருமுனையில் நிதானமாக ஆடிய போது, எதிர்முனையில் நின்று நியூசிலாந்து பவுலர்களை வெளுத்து கட்டினார் ஸ்ரேயாஸ் ஐயர். ஒரு கட்டத்தின் மிட்செல் சான்ட்னரால் கூட அவரை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதனிடையே உலகக்கோப்பை தொடரின் முதல் சில போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் மோசமாக விளையாடி ஆட்டமிழந்த போது அவர் மீது அதிக விமர்சனங்கள் எழுந்தன. இதுகுறித்து பேசியுள்ள ஸ்ரேயாஸ் ஐயர், உலகக்கோப்பை தொடரின் முதல் இரு போட்டிகளில் என்னால் சிறப்பாக விளையாட முடியவில்லை. எனக்கு சிறந்த தொடக்கம் கிடைத்தும், அதனை பெரிய ஸ்கோராக மாற்ற முடியவில்லை.

ஆனால் ஆஃப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் நான் நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்துள்ளேன். வெறும் 2 போட்டிகளில் மோசமாக விளையாடியதால், எனது பேட்டிங்கில் பிரச்சனை இருப்பதாக ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கினார்கள். இதனால் உள்ளுக்குள் கோபம் ஏற்பட்டது. ஆனால் கோபத்தை வெளிக் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் எனக்கான நேரம் வரும் என்று எனக்கு நன்றாக தெரியும். அப்போது நிரூபிக்க காத்திருந்தேன்.
அது இப்போது வந்துள்ளது. நான் மோசமான ஆட்டமிழந்த போதும், கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இருவரும் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். அவர்கள் இருவரும் என்னிடம் வெளியில் வரும் விமர்சனங்களை கண்டுகொள்ள வேண்டாம், எங்களுக்கு உன் மீது நம்பிக்கை இருப்பதாக கூறினார்கள். களத்திற்கு சென்று உன் விருப்பத்திற்கேற்ப பொறுப்புடன் விளையாடு என்று அனுமதித்தார்கள் என்று தெரிவித்துள்ளார்.