மும்பை : நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சர்பராஸ்கான் 150 ரன்கள் விளாசிய பிறகு நடு வரிசையில் கடும் போட்டி ஏற்பட்டு இருப்பதாக இந்திய அணியின் துணை பயிற்சி ரயன் டென் டோசேட் தெரிவித்துள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் கே எல் ராகுல் முதல் இன்னிங்சில் டக் அவுட், இரண்டாவது இன்னிங்சில் 12 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
ராகுல் சொற்ப ரன்களில் ஆட்டம் காரணமாக இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் வியாழக்கிழமை 24ஆம் தேதி தொடங்குகிறது.

இந்த போட்டி குறித்து இந்திய அணியின் துணை பயிற்சியாளர் அளித்துள்ள பேட்டியை தற்போது பார்க்கலாம். சர்பராஸ்கான் அபாரமாக விளையாடி இருக்கிறார். இதனால் இந்திய அணியில் நிச்சயம் கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது. பெங்களூர் டெஸ்ட் போட்டிக்கு பிறகு நான் கே.எல். ராகுலிடம் பேசினேன்.
நீங்கள் எத்தனை பந்துகளை பேட்டிங் செய்யும்போது மிஸ் செய்தீர்கள் என்று கேட்டேன். ஆனால் அவர் அனைத்து பந்தையும் அடிக்க முற்பட்டு இருக்கிறார். கே.எல் ராகுல் மனதளவில் நல்ல உத்வேகத்துடன் இருக்கின்றார். ஆனால் பேட்டிங்கில் ஏழு வீரர்களுக்கு தான் இடம் இருக்கிறது. தற்போது கடும் போட்டி இந்திய அணியில் ஏற்பட்டிருக்கிறது ரிஷப் பண்ட் உடல்நிலை நல்ல முறையில் முன்னேறி இருக்கிறது.
இரண்டாவது டெஸ்டில் அவர் விக்கெட் கீப்பிங் செய்வார் என எதிர்பார்க்கின்றேன். பேட்டிங் செய்யும்போது ரன் ஓடும் போது அவருக்கு காலில் வலி ஏற்பட்டதாக கூறினார். எனினும் ரிஷப் பன்ட் பெங்களூர் டெஸ்டில் அதிக நேரம் களத்தில் நின்று விளையாடினார். அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு 100% உடல் தகுதியை எட்டி விடுவார் என நம்புகிறேன்.
அஸ்வினும் தற்போது நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார். அவருக்கும் எந்த தசை பிடிப்பும் இல்லை. பெங்களூரில் அமைக்கப்பட்டிருந்த ஆடுகளம் எங்களுடைய சுழற் பந்துவீச்சாளர்களுக்கு உதவவில்லை. ஆடுகளத்தில் இருந்து கொஞ்சம் உதவி கிடைத்து இருந்தால் எங்களுடைய சுழற் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு இருப்பார்கள். நியூசிலாந்து அணியில் ரச்சின், கான்வே போன்றோர் அபாரமாக விளையாடினார்கள்.
இதேபோன்று இந்திய அணியில் அக்சர் பட்டேல் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அக்சர் பட்டேல் இடது கை பேட்ஸ்மேன் களுக்கு எதிராக நன்றாக பந்து வீசுவார். மேலும் ரஞ்சி கோப்பையில் சிறப்பாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். எனினும் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது குறித்து போட்டிக்கு முன்பு தான் முடிவு எடுக்கப்படும் என துணை பயிற்சியாளர் டென் டோசேட் கூறியுள்ளார்.