IND vs NZ: புவனேஷ்வர் குமாருக்கு கண்டம்.. பிளேயிங் 11-ல் அதிரடி மாற்றங்கள்.. குல்தீப், இஷான் உள்ளே
ஆக்லாந்து: நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி ஏற்கனவே 3-0 என்ற கணக்கில் வென்று தொடரைக் கைப்பற்றிவிட்டது. இதனால் ஆக்லாந்தில் நடைபெறும் 4-வது டி20 போட்டியில், இதுவரை பெஞ்சில் அமர வைக்கப்பட்ட வீரர்களுக்கு வாய்ப்பளிக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக ஆடும் லெவனில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்து டி20 தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணியில் இதுவரை 13 வீரர்கள் களமிறங்கிவிட்டனர். ஆனால் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 2026 ஐபிஎல் தொடருக்குப் பிறகு தொடர் காயங்களால் அவதிப்பட்ட வருண் சக்கரவர்த்தி தற்போது முழு உடற்தகுதியுடன் உள்ளார். எனவே ஆல்ரவுண்டர் அக்சர் படேலுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு குல்தீப் யாதவ் அல்லது வருண் சக்கரவர்த்தி ஆகியோரில் ஒருவரை அணியில் சேர்க்க கம்பீர் முடிவெடுக்கலாம்.

அதேபோல் காயம் காரணமாக கடந்த 2 போட்டிகளில் விளையாடாத இஷான் கிஷன் உடற்தகுதி பெற்று திரும்பினால், கடந்த போட்டியில் 19 பந்துகளில் 45 ரன்கள் விளாசிய 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி வெளியே உட்கார வைக்கப்படலாம். சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோரே அணியின் நிரந்தர தொடக்க ஜோடி என கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார். இதனால் இஷான் கிஷன் 3-வது வரிசையில் ஆட வாய்ப்புள்ளது.
மறுபுறம், 3 போட்டிகளில் 72 பந்துகளில் 139 ரன்களை வாரி வழங்கிய மூத்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாருக்குப் பதிலாக இளம் வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் மீண்டும் அணிக்குள் வர அதிக வாய்ப்புள்ளது.
இந்திய உத்தேச அணி: சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி அல்லது இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, நமன் திர், குல்தீப் யாதவ் அல்லது வருண் சக்கரவர்த்தி, மயங்க் யாதவ் அல்லது புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ்.


Click it and Unblock the Notifications

