கடைசி 10 ஓவரில் 110 ரன்கள்.. வான்கடேவில் ஸ்ரேயாஸ் காட்டிய வான வேடிக்கை.. நியூசி.க்கு சாதனை இலக்கு!
மும்பை: இந்திய அணிக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற 398 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ரோகித் சர்மா - சுப்மன் கில் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா 29 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து சுப்மன் கில் - விராட் கோலி கூட்டணி இணைந்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தியது. சிறப்பாக ஆடிய சுப்மன் கில் 41 பந்துகளில் அரைசதம் அடிக்க, மறுபக்கம் விராட் கோலி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைசதத்திற்கு பின் சுப்மன் கில் அதிரடியாக ரன்கள் குவித்த நிலையில், 79 ரன்கள் எடுத்திருந்த போது காலில் பிடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக சுப்மன் கில் 65 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து ரிட்டையர்ட் ஹர்ட்டாகி வெளியேறினார்.
இதையடுத்து விராட் கோலி - ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணி ஸ்பின்னர்களை பொளந்து கட்டியது. சிறப்பாக ஆடிய விராட் கோலி 59 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இதனைத் தொடர்ந்து அதிரடியாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர், சான்ட்னர் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோரின் பந்துகளில் சிக்சர்களை விளாசி தள்ளினார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் 36 ஓவர்களிலேயே 250 ரன்களை கடந்தது. அதிரடியாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 35 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
அரைசதம் விளாசிய பின் விராட் கோலி - ஸ்ரேயாஸ் இருவருமே கியரை மாற்றினர். சிறப்பாக ஆடிய விராட் கோலி 106 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி அடிக்கும் 50வது சதமாகும். அதன்பின் சிக்சர்களை விளாசிய அவர், 113 பந்துகளில் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோலி வெளியேறிய பின் ஸ்ரேயாஸ் ஐயர் உச்சக்கட்ட அதிரடியை வெளிப்படுத்தினார். சிக்சர்களை விளாசி தள்ளிய அவர், 66 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார்.
தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் 1 ரன்னில் வெளியேறினார். கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய கேஎல் ராகுல் 19 பந்துகளில் 35 ரன்கள் எடுக்க, இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 397 ரன்கள் குவித்தது. கடைசி 10 ஓவர்களில் மட்டும் 110 ரன்கள் சேர்க்கப்பட்டது. நியூசிலாந்து அணி தரப்பில் 10 ஓவர்களில் 100 ரன்களை விட்டுக் கொடுத்த டிம் சவுதி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


Click it and Unblock the Notifications