தரம்சாலா: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரின் 21வது லீக் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்த உலகக்கோப்பை தொடரில் இரு அணிகளும் இதுவரை ஒரு போட்டியில் கூட தோல்வியடையவில்லை. இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளிலும் இரு அணிகள் அபார வெற்றியை பெற்றுள்ளன. இதனால் முதல் தோல்வி யாருக்கு என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகியுள்ளது.

இந்த நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். தரம்சாலா மைதானத்தில் மாலை 6 மணி அளவிலேயே பனிப்பொழிவு வரும் வாய்ப்புகள் இருப்பதால், சேஸிங் செய்யும் அணியே வெற்றிபெற அதிக வாய்ப்புகள் உள்ளது. அதுமட்டுமல்லாமல் கடந்த 4 போட்டிகளிலும் இந்திய சேஸிங் செய்து வெற்றிபெற்றுள்ளதால், இந்தியாவுக்கு சாதகமாக டாஸ் விழுந்துள்ளது.
இந்த போட்டியில் இருந்து நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விலகியுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் பவுலிங் ஆல்ரவுண்டர் ஹர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக முகமது ஷமி களமிறக்கப்பட்டுள்ளார். இதனால் இந்திய அணி தரமான 5 பவுலர்களுடன் களமிறங்கியுள்ளது.
இதுகுறித்து ரோகித் சர்மா பேசுகையில், நாங்கள் பந்துவீச்சை தேர்வு செய்கிறோம். நேற்று பயிற்சி மேற்கொண்ட போதே மாலையில் பனிப்பொழிவு இருந்தது. கடந்த வெற்றிகளை மறந்துவிட்டு, களத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்று கவனம் கொள்ள வேண்டும். இந்த மைதானத்தில் அனைவரும் விளையாட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஹர்திக் பாண்டியா மற்றும் ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக ஷமி மற்றும் சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து நியூசிலாந்து அணியின் டாம் லேதம் பேசுகையில், நாங்களும் சேஸிங் செய்யவே விரும்பினோம். பனிப்பொழிவு இருக்கும் என்று அறிவோம். அதனால் செய்வதை சரியாக செய்ய வேண்டும். வெற்றியை தொடர வேண்டும். புதிய மைதானத்தில் புதிய சூழலில் விளையாடுகிறோம். அதனால் சூழலுக்கு தகுந்தாற் போல் எங்களை நாங்கள் மாற்றி கொள்ள வேண்டும். எங்கள் அணியில் எந்த மாற்றமும் இல்லை. 3 வேகப்பந்துவீச்சாளர்கள், 2 ஸ்பின்னர்களுடன் களமிறங்குகிறோம் என்று கூறியுள்ளார்.