பெங்களூர் : நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் சுப்மன் கில் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. இந்த நிலையில் கடைசி நேரத்தில் அணிக்கு சர்பராஸ்கான் கொண்டுவரப்பட்டார். கில், மூன்றாவது வீரராக களம் இறங்கக் கூடியவர். டெஸ்ட் கிரிக்கெட் அணையில் மூன்றாவது வீரர் என்பது மிகப்பெரிய பொறுப்பு.
ஏனென்றால் தொடக்க வீரர்கள் விரைவில் ஆட்டம் இழந்து விட்டால் மூன்றாவது வீரர் தான் களத்தில் அதிக நேரம் செலவிட்டு புதிதாக இருக்கும் பந்தை எதிர்கொண்டு விளையாட வேண்டும். இதனால் அதிக நேரம் களத்தில் அவர் நேரத்தை செலவிடுவதன் மூலம் பந்து ஸ்விங் ஆகும் தன்மையை இழந்து விடும்.

இதனால் 4 மற்றும் 5 , 6 வது இடத்தில் விளையாடும் வீரர்கள் மிகப்பெரிய ஸ்கோரை குவிக்க முடியும். இதனால் தான் ஒவ்வொரு அணியிலும் டிராவிட், ரிக்கி பாண்டிங், டான் பிராட்மேன் போன்ற ஜாம்பவான்கள் விளையாடி வந்தனர். இந்திய அணியிலும் புஜாராதான் மூன்றாம் இடத்தில் இருந்தார்.
தற்போது அந்த பொறுப்புக்கு கில் வந்திருக்கிறார். இதில் முதலில் தருமாறினாலும், இரண்டாவது இன்னிங்ஸில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த தருணத்தில் தான் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பே கில்லுக்கு கழுத்தில் வலி ஏற்பட்டது. இதனால் அவருக்கு பதில் சர்பராஸ்கான் சேர்க்கப்பட்டார்.
எனினும் விராட் கோலி தான் மூன்றாவது வீரராக களத்திற்கு வந்து விளையாடினார். ஆனால் விராட் கோலி டக் அவுட் ஆகி வெளியேறினார். இது குறித்து கடும் விமர்சனத்தை வைத்த முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த், ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தால் வீரர்கள் மகிழ்ச்சியாக விளையாடுகிறார்கள்.
ஆனால் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தால் பேட்ஸ்மேன்களுக்கு கழுத்தில் வலி வந்து விடுகிறது. அது எப்படி நேற்று வரை நன்றாக இருந்த கில்லுக்கு ஆடுதளத்தை பார்த்தவுடன் கழுத்தில் வலி ஏற்பட்டு விடுகிறது என்று ஸ்ரீகாந்த் கிண்டல் அடித்தார். கில் கடைசி நேரத்தில் விலகியதால் தான் அணியின் பேலன்ஸ் பாதிக்கப்பட்டதாக ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.