Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: பந்துவீச்சில் தடுமாறிய ஜடேஜா, குல்தீப்.. அறிவுரை வழங்கிய அஸ்வின்.. முக்கியமான கட்டம் என கருத்து

மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர், குல்தீப் யாதவின் நம்பிக்கையைக் குறைத்திருக்கலாம் என முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், தெரிவித்துள்ளார். இது 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன் முக்கியத்துவம் வாய்ந்தது என அவர் கூறியுள்ளார். இந்தத் தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. சொந்த மண்ணில் நியூசிலாந்திடம் ஒருநாள் தொடரை இந்தியா இழந்தது இதுவே முதல் முறை.

31 வயதான சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், இந்தத் தொடரில் பந்துவீச்சில் வழக்கத்திற்கு மாறாகத் தடுமாறினார். அவர் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார், அதிலும் 60.66 என்ற அதிகபட்ச சராசரி மற்றும் 7.28 என்ற எகானமியில் ரன்களை வாரி வழங்கினார். நியூசிலாந்து பேட்டர்களுக்கு எதிராக குல்தீப்பின் இந்த மோசமான செயல்பாடு இந்தியாவின் 1-2 தொடர் தோல்விக்கு முக்கியமானது.

தனது யூடியூப் சேனலில் குல்தீப்பின் பந்துவீச்சு குறித்து பேசிய அஷ்வின், "நியூசிலாந்து பேட்டர்கள் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை உடனடியாக அடித்து விளையாடி, துணிச்சலான அணுகுமுறையை கையாண்டனர். குல்தீப் யாதவ் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர். அவரிடம் அனைத்து திறன்களும் உள்ளன. ஆனால், டி20 உலகக் கோப்பைக்கு முன், அவரது நம்பிக்கை சற்று குறைந்திருக்கும்" என்றார்.

"குல்தீப் யாதவுக்கு நான் சொல்ல விரும்புவது, அவர் இன்னும் கொஞ்சம் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதுதான். மிட்செல் போன்ற ஒரு பேட்டர் ஆதிக்கம் செலுத்தி விக்கெட்டுகள் விழாதபோது, நாம்தான் மாற்றங்களைச் செய்ய வேண்டும். அவரது ஆஃப் சைட் ரன்கள் குறைந்திருப்பதை பார்க்கிறேன். மூன்று ஒருநாள் போட்டிகளிலும் குல்தீப் இதை முழுமையாக செய்யாதது எனக்குக் கவலையளிக்கிறது" என அஷ்வின் குறிப்பிட்டார்.

டேரில் மிட்செலின் ஆட்டத்திற்கு குல்தீப் யாதவாலும், இந்திய அணியாலும் பதில் சொல்ல முடியவில்லை. அவர் இத்தொடரில் 352 ரன்கள் குவித்து அதிக ரன் எடுத்த வீரராகத் திகழ்ந்தார். இதில் இரண்டு சதங்களும் அடங்கும். மிட்செல் 176 என்ற அற்புதமான சராசரி மற்றும் 110.34 என்ற ஸ்ட்ரைக் ரேட்டை கொண்டிருந்தார்.

நியூசிலாந்துடன் தொடர் தோல்விக்குப் பிறகு, குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இரு இந்திய சுழற்பந்து வீச்சாளர்களும் தங்கள் ஆட்டத்தை மேம்படுத்த வேண்டும் என ரவிச்சந்திரன் அஷ்வின் வேண்டுகோள் விடுத்தார். குல்தீப் பந்துவீச்சில் ரன்களை வாரி வழங்க, ஜடேஜா மூன்று ஆட்டங்களிலும் விக்கெட் எடுக்காமல் இருந்தார்.

இது குறித்து பேசிய அஷ்வின், "லெனாக்ஸின் பந்துவீச்சைப் பலரும் பார்த்து, ஜடேஜா மற்றும் குல்தீப்பின் பந்துவீச்சை விமர்சித்தனர். ஆம், இருவரும் தங்கள் ஆட்டத்தை மேம்படுத்த வேண்டிய சூழலில் இருக்கிறார்கள். இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் இருவரும் இன்னும் கொஞ்சம் புதுமையாக யோசித்து பந்துவீசலாம்" என்றார்.

இளம் நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஜேடன் லெனாக்ஸ்-க்கு எதிராக இந்திய பேட்டர்களின் ஆட்டம் குறித்தும் அஷ்வின் அதிருப்தி தெரிவித்தார். அவர் கூறுகையில், "லெனாக்ஸை அடித்து விளையாட ஹர்ஷித் ராணா மட்டுமே தனது கால்களைப் பயன்படுத்தி சிக்ஸர் அடித்தார். அதுவரை இந்திய பேட்டர்கள் யாரும் அவருக்கு எதிராக கால்களைப் பயன்படுத்தவில்லை" என்று முடித்தார்.

தனது முதல் சர்வதேசத் தொடரில் களமிறங்கிய ஜேடன் லெனாக்ஸ், இந்திய பேட்டர்களைக் கடுமையாகச் சோதித்தார். அவர் இறுதி இரண்டு ஒருநாள் போட்டிகளில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி, வெறும் 28 என்ற பந்துவீச்சு சராசரி மற்றும் 4.20 என்ற குறைந்த எகானமியில் இந்தியாவைச் சுழற்றியடித்தார்.

Story first published: Monday, January 19, 2026, 20:55 [IST]
Other articles published on Jan 19, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+