மும்பை: "ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை குறைத்து மதிப்பிடுவது முட்டாள்தனமானது. அவர்கள் இன்னும் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்" என்று இந்தியா வரவுள்ள நியூசிலாந்து அணியின் கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 11) தொடங்கவுள்ளது. இது தொடர்பாகப் பேசிய நியூசிலாந்து கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல், இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் மற்றும் கோலிக்குத் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மைக்கேல் பிரேஸ்வெல், "ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் அடுத்த ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரிலும் விளையாடுவதைப் பார்க்க நான் விரும்புகிறேன். அவர்கள் இருவரும் மிக அழகாக பேட்டிங் செய்து வருகிறார்கள். அவர்களை நிறுத்துவதற்கு எந்தக் காரணமும் இல்லை" என்று கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், "தனிப்பட்ட முறையிலும் சரி, அணியாகவும் சரி, அவர்களுடைய சாதனைகளே அவர்கள் யார் என்பதை உலகுக்குச் சொல்லும். இந்திய அணியின் மிகச்சிறந்த வெற்றிகளில் அவர்கள் பங்காற்றியுள்ளனர். அப்படிப்பட்டவர்களைக் குறைத்து மதிப்பிட்டால், அது நிச்சயம் முட்டாள்தனமாகவே இருக்கும்" என்று இந்தியத் தேர்வுக்குழு மற்றும் விமர்சகர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார்.
இந்தியா - நியூசிலாந்து இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் விவரம்:
முதல் போட்டி: ஜனவரி 11 (ஞாயிறு) - வதோதரா
இரண்டாவது போட்டி: ஜனவரி 14 - ராஜ்கோட்
மூன்றாவது போட்டி: ஜனவரி 18 - இந்தூர்
இந்தத் தொடரில் நியூசிலாந்து அணியின் முக்கிய வீரர்களான மிட்செல் சாண்ட்னர், டாம் லேதம் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் இடம்பெறவில்லை. இதனால் கேப்டன் பொறுப்பை மைக்கேல் பிரேஸ்வெல் ஏற்றுள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடர் தொடங்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், இந்த ஒருநாள் தொடர் மிகவும் முக்கியமானது என்று நியூசிலாந்து அணி கருதுகிறது. இதுகுறித்து பேசிய பிரேஸ்வெல், "இந்திய மைதானங்களின் தன்மையைப் புரிந்து கொள்ளவும், உலகக் கோப்பைக்குத் தயாராகவும் இந்தத் தொடர் எங்களுக்கு உதவும். ஒருநாள் போட்டிகளில் நீண்ட நேரம் பேட்டிங் செய்வது மற்றும் அழுத்தத்தைக் கையாள்வது டி20 போட்டிக்கும் கைகொடுக்கும்" என்று தெரிவித்தார்.
நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் பேசுகையில், இந்தத் தொடரில் மைக்கேல் ரே, கிறிஸ்டியன் கிளார்க் மற்றும் ஜெய்டன் லெனாக்ஸ் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்தியச் சூழலில் விளையாடுவது இந்த இளம் வீரர்களுக்குச் சிறந்த அனுபவமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.