இந்திய ODI தொடருக்கு முன் நியூசிலாந்துக்கு இரட்டைப் அடி.. ரச்சின் ரவீந்திரா, சாப்மேன் விலகல்
ஹாமில்டன்: இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே நியூசிலாந்து அணிக்கு பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் நட்சத்திர பேட்டர்களான ரச்சின் ரவீந்திரா மற்றும் மார்க் சாப்மேன் ஆகிய இருவரும் காயம் காரணமாக ஒருநாள் தொடரிலிருந்து முழுமையாக விலகியுள்ளனர்.
விளம்பரப் படப்பிடிப்பின் போது எதிர்பாராதவிதமாக தோள்பட்டையில் காயம் அடைந்த ரச்சின் ரவீந்திரா, பீல்டிங் செய்வதற்கு இன்னும் முழு உடற்தகுதி பெறவில்லை. இம்மாத இறுதியில் இந்தியாவுக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட முக்கிய டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளதால், அவரை வைத்து எந்த ரிஸ்க்கும் எடுக்க நியூசிலாந்து நிர்வாகம் விரும்பவில்லை. அதேபோல் தொடைத் தசைப் பிடிப்பால் அவதிப்படும் மார்க் சாப்மேனுக்கு இன்னும் 2 வார கால ஓய்வு தேவைப்படுவதால் அவரும் விலகியுள்ளார்.

முன்னணி வீரர்கள் விலகியதைத் தொடர்ந்து, உள்நாட்டுப் போட்டியில் 119 ரன்கள் விளாசிய அனுபவ வீரர் ஹென்றி நிக்கோல்ஸ் முதல் 3 ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடைசி 2 போட்டிகளுக்கு மட்டும் தேர்வு செய்யப்பட்டிருந்த அதிரடி ஆட்டக்காரர் டிம் சீஃபர்ட், தற்போது தொடர் முழுவதும் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. டீன் பாக்ஸ்கிராப்ட் கடைசி 2 போட்டிகளுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இரு முக்கிய வீரர்கள் விலகியது குறித்துப் பேசிய நியூசிலாந்து பயிற்சியாளர் ராப் வால்டர், "இருவருமே அணிக்கு மிகப்பெரிய பலம். அவர்கள் இந்தத் தொடரைத் தவறவிடுவது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. ரச்சின் ரவீந்திரா டெஸ்ட் தொடருக்குள் முழு உடற்தகுதி பெறுவார் என நம்புகிறோம்" என்றார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி புதன்கிழமை ஆக்லாந்தின் ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது.
முதல் 3 ஒருநாள் போட்டிகளுக்கான நியூசிலாந்து அணி: மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், டெவோன் கான்வே, ஜேக்கப் டஃபி, மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், கிளென் பிலிப்ஸ், டிம் சீஃபர்ட், நேதன் ஸ்மித், வில் யங், பிளேர் டிக்னர்.
கடைசி 2 ஒருநாள் போட்டிகளுக்கான நியூசிலாந்து அணி: மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், கிறிஸ்டியன் கிளார்க், ஜேக்கப் டஃபி, மேட் ஃபிஷர், டீன் பாக்ஸ்கிராப்ட், லாக்கி பெர்குசன், மிட்ச் ஹே (விக்கெட் கீப்பர்), நிக் கெல்லி, டிம் சீஃபர்ட் (விக்கெட் கீப்பர்), பிளேர் டிக்னர், வில் யங்.


Click it and Unblock the Notifications

