சொந்த மண்ணில் விராட் கோலி ஆட முடியாது.. டெல்லி ரசிகர்களுக்கு ஏமாற்றம் தந்த பிசிசிஐ.. காரணம் இதுதான்
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்டர் விராட் கோலி, தனது சொந்த ஊரான டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் களமிறங்குவது சந்தேகமாகியுள்ளது. மைதான சீரமைப்புப் பணிகள் முடிவடையாததால், இந்த போட்டி வேறு மைதானத்திற்கு மாற்றப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் தொடக்க ஆட்டம் அடுத்த மாதம் டெல்லியில் நடைபெறுவதாக அட்டவணை வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தின் அவுட்பீல்ட் பகுதியை மணல் அடிப்படையிலான வடிகால் அமைப்பாக மாற்றும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் முழுமையாக முடிவடைந்து மைதானம் பயன்பாட்டிற்கு வர அடுத்த ஆண்டு ஐபிஎல் 2027 சீசன் வரை ஆகும் எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக வெளியான தகவலின்படி, "மைதான சீரமைப்புப் பணிகள் முழுமை பெற இன்னும் சுமார் 4 மாதங்கள் வரை தேவைப்படும். லக்னோ, முல்லன்பூர் உள்பட நாட்டின் 75 சதவீத மைதானங்களில் மணல் அடிப்படையிலான அவுட்பீல்ட் முறை பயன்படுத்தப்படுகிறது. இது மழை பெய்தால் நீரை உடனடியாக வெளியேற்றி, ஆட்டத்தை விரைவாகத் தொடங்க உதவும். இந்தப் பணிகள் முடிந்த பிறகு மழைக்காக ஒட்டுமொத்த மைதானத்தையும் மூட வேண்டிய அவசியம் இருக்காது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகள் காரணமாக டெல்லி அணியின் ரஞ்சி கோப்பை உள்ளூர் போட்டிகள் ஏற்கனவே பாலம் பகுதியில் உள்ள விமானப்படை மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. முன்னதாக இந்த ஒருநாள் போட்டி அகமதாபாத்திற்கு மாற்றப்படலாம் என்ற செய்திகளை பிசிசிஐ இணைச் செயலாளர் தேவாஜித் சைகியா மறுத்திருந்தார். எனினும் மைதானப் பணிகள் முடிவடையாத சூழலில், போட்டி வேறு இடத்திற்கு மாற்றப்படும் அபாயம் எழுந்துள்ளது.
கடந்த 2023 அக்டோபரில் நடைபெற்ற ஒருநாள் போட்டி உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு டெல்லியில் இந்திய அணி ஒருநாள் போட்டியில் ஆடவில்லை. இந்நிலையில் டெல்லியை சேர்ந்த விராட் கோலியின் ஆட்டத்தை நேரில் கண்டு ரசிக்க ஆவலுடன் காத்திருந்த அவரது சொந்த மண் ரசிகர்களுக்கு இந்தச் செய்தி பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications

