துபாய்: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணி மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் சாம்பியன்ஸ் கோப்பை வரலாற்றில் அதிக முறை கோப்பையை வென்ற அணி என்ற பெயரும் இந்திய அணிக்கு கிடைத்திருக்கிறது. இது இந்தியா வென்ற 7வது ஐசிசி தொடராகும்.
இந்தத் தொடரை பாகிஸ்தான் நடத்தினாலும், இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற்றது. இந்த நிலையில் இறுதிப்போட்டியில் கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு ஐசிசி தலைவர் ஜெய் ஷா மற்றும் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி உள்ளிட்டோர் வெற்றி பெற்றதற்கான விருதுகளையும் கோப்பையையும் வழங்கி கௌரவித்தனர்.

இந்த சூழலில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர், தங்களது நாட்டு கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுக்கு கடும் எதிர்ப்பு ஒன்றை தெரிவித்திருக்கிறார். இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தான் இந்த தொடரை நடத்துகிறது.
ஆனால் பரிசளிக்கும் விழாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இது எனக்கு ஆச்சரியமாகவும் வினோதமாகவும் இருக்கிறது. தொடரை நடத்தும் நீங்கள் ஏன் இந்த விழாவில் பங்கேற்கவில்லை. சாம்பியன்ஸ் டிராபி என்பது உலக அளவிலான மேடை.
இந்த தொடரை நடத்தும் பொறுப்பு உங்களிடம் இருக்கும் போது உங்களிலிருந்து யாரேனும் ஒருவராவது அந்த மேடையில் இருந்திருக்க வேண்டாமா? சாம்பியன்ஸ் கோப்பை வென்ற இந்தியாவுக்கு நீங்கள் பரிசளித்திருக்க வேண்டாமா? நீங்கள் செய்வது எல்லாம் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
இனி அப்படி ஒரு தவறை செய்யாதீர்கள். எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது என்று கடுமையான குற்றச்சாட்டுகளை சோயிப் அக்தர் வைத்திருக்கிறார். இறுதிப்போட்டி லாகூரில் இருந்து மாற்றப்பட்டதால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்தியா விளையாடிய இறுதிப்போட்டியில் பங்கேற்காமல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் புறக்கணித்து இருக்கிறார்கள். இது இந்தியாவை அவமானப்படுத்தும் விதமாக இருப்பதாக சோயிப் அக்தர் தற்போது குற்றம் சாட்டி இருக்கிறார்.