IND vs NZ: டி20 தொடரில் இந்தியா 4-1 என தோற்றிருக்க வேண்டும்.. உண்மையை மூடி மறைக்காதீங்க- அஸ்வின் தாக்கு
மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றிய போதிலும், அணியின் பந்துவீச்சு செயல்பாட்டை சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் கடுமையாக விமர்சித்துள்ளார். ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் வெற்றி பெற்றிருந்தாலும், பந்துவீச்சு ஒரு பெரிய கவலைக்குரிய விஷயமாக உருவெடுத்துள்ளது.
இந்திய பந்துவீச்சாளர்கள் மூன்று போட்டிகளில் 200 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை விட்டுக்கொடுத்ததோடு, இலக்கைத் தற்காக்கவும் தவறினர். பந்துவீச்சு பிரிவில் பெரும்பாலானோர் புதிய வீரர்கள் என்பதை ஏற்றுக்கொண்ட அஸ்வின், அணியின் திட்டமிடல் மற்றும் தயாரிப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடக்கநிலை தவறுகள் அதிகம் நடந்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், நிலைமை மேலும் மோசமடைவதற்கு முன் சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இதுகுறித்து தனது யூடியூப் நிகழ்ச்சியில் பேசிய அஸ்வின், "இது ஒரு பெரிய கவலைக்குரிய விஷயம். குறிப்பாக கடைசி சில போட்டிகளில் நாம் எத்தனை முறை 200 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்திருக்கிறோம் என்று பாருங்கள்."
"நான் அணியை பாராட்டுகிறேன், ஆனால் பந்துவீச்சு நிலைமை இன்னும் மோசமடைவதற்கு முன் அதை கவனிக்க வேண்டும். பந்துவீச்சு வரிசையில் புதிய வீரர்கள் உள்ளனர். ஆனால் அவர்களின் திட்டமிடல் என்ன, அணி கூட்டங்களில் என்ன பேசுகிறார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இதை நீங்கள் இப்போதே சரிசெய்யாவிட்டால், பிரச்சனை பெரிதாகிவிடும். சில அடிப்படை தவறுகள் நடந்துள்ளன" என்று கூறினார்.
அதேவேளையில், தொடர் முழுவதும் பேட்டர்களின் சிறப்பான செயல்பாட்டை அஸ்வின் பாராட்டினார். குறிப்பாக கீழ் வரிசையில் நமன் தீர், நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் திலக் வர்மா ஆகியோரின் ஆட்டம் அணிக்கு பெரிய பாசிட்டிவான விஷயம் என்று அவர் சுட்டிக்காட்டினார். அபிஷேக் சர்மா ஒரு அற்புதமான இன்னிங்ஸை விளையாடினார் என்றும், சஞ்சு சாம்சன் ஒரு நல்ல இன்னிங்ஸை அளித்ததாகவும் குறிப்பிட்ட அஸ்வின், பும்ரா இல்லாத நிலையில் இந்தியா டி20 பந்துவீச்சில் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
"225 ரன்களை விட்டுக்கொடுத்த பிறகு முதல் போட்டியில் இந்தியா தோற்றிருக்கக் கூடும். இரண்டாவது போட்டியிலும் நம்பமுடியாத சூழ்நிலையிலிருந்துதான் மீண்டு வந்தார்கள். அதனால் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே மிக மெல்லிய கோடே இருந்தது. உண்மையில் நாம் 4-1 என்ற கணக்கில் தோற்றிருக்கலாம். நியூசிலாந்து அணி 16 கேட்சுகளை தவறவிட்டது. அணி சிறந்து விளங்க வேண்டும் என்பதே என் விருப்பம். அதை மூடி மறைத்துவிட்டு 3-2 என வென்றுவிட்டோம் என்று சொல்வதில் அர்த்தமில்லை" என்று அஸ்வின் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications


