“அவர் பவுலிங் செய்ததை பார்த்தால்..” .. புவனேஸ்வர் குமார் பற்றி அஸ்வின் சொன்ன கசப்பான உண்மை
சென்னை: நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் ரன்களை வாரி வழங்கி வரும் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், அடுத்த போட்டிகளில் அணியில் இருந்து நீக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் எச்சரித்துள்ளார். 2026 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதால், சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு 36 வயதான புவனேஷ்வர் குமாருக்கு இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைத்தது. ஆனால் அவரது இந்த வருகை கசப்பான அனுபவமாகவே மாறியுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான நடப்பு டி20 தொடரில் இந்தியா முதல் 3 போட்டிகளிலும் வென்று தொடரைக் கைப்பற்றிவிட்டது. எனினும், புவனேஷ்வர் குமார் விளையாடிய 3 போட்டிகளில் வெறும் 1 விக்கெட்டை மட்டுமே எடுத்துள்ளார். அவரது எகானமி ரேட் 11.58 ஆக மோசமடைந்துள்ளது.

இது தொடர்பாக தனது யூடியூப் சேனலில் பேசிய அஸ்வின், "புவனேஷ்வர் குமார் பந்துவீசிய விதத்தைப் பார்த்தால், எஞ்சிய போட்டிகளில் அவருக்குப் பதிலாக மயங்க் யாதவ் அல்லது ஒரு சுழற்பந்து வீச்சாளரை களம் இறக்கலாம். அப்படி நடந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இந்தியா தொடரை வென்றுவிட்டதால் நியூசிலாந்து அணியைப் போல வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்த வாய்ப்புள்ளது. முதல் 2 போட்டிகள் பெரிய மைதானங்களில் நடந்தன. ஆனால் அடுத்த 2 போட்டிகள் மிகச் சிறிய மைதானங்களில் நடக்க உள்ளன" என்று வெளிப்படையாகத் தெரிவித்தார்.
முதல் போட்டியில் அபாரமாக வீசிய இளம் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ், அடுத்த போட்டிகளில் நீக்கப்பட்டார். அவருக்குப் பதில் வந்த பிரின்ஸ் யாதவ் எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை. மேலும், குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய முன்னணி சுழற்பந்து வீச்சாளர்கள் இதுவரை ஒரு போட்டியில் கூட ஆடவில்லை. இதனால் கடைசி 2 போட்டிகளில் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணி, புவனேஷ்வர் குமாரை ஓரங்கட்டிவிட்டு மற்ற பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு வழங்கும் என ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அபிஷேக் சர்மா இந்த தொடரில் சிறப்பாக ரன் குவித்து இருக்கும் நிலையில் அவருக்கு கடைசி 2 போட்டிகளில் ஓய்வு அளிக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications

