பெங்களூர் : நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி இருக்கிறது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் நியூஸிலாந்து அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருக்கிறது. இந்திய அணி டாஸ் வென்று 46 ரன்களில் ஆட்டம் இழந்ததே தோல்விக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது.
இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வியை தழுவும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்திய வீரர்கள் சர்பராஸ்கான், ரிஷப் பண்ட் ஆகியோர் அதிரடியாக விளையாடி இந்திய அணியை இரண்டாவது இன்னிங்ஸில் காப்பாற்றினர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கேப்டன் ரோகித் சர்மா, இரண்டாவது இன்னிங்ஸில் எங்களுடைய பேட்ஸ்மேன்கள் மிகப் பிரமாதமாக விளையாடினார்கள். அவர்கள் போட்ட உழைப்பு பாராட்டத்தக்கது. முதல் இன்னிங்ஸில் குறைவாக ரன்கள் எடுத்ததை அடுத்து இனிவரும் வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தோம்.
இதில் சர்பராஸ்கானும், ரிஷப் பண்ட்டும் சிறப்பாக விளையாடினார்கள். 350 ரன்களுக்கு மேல் பின் தங்கி இருந்தபோது உங்களால் வெற்றி குறித்து பெரிய அளவில் யோசிக்க முடியாது. இரண்டாவது இன்னிங்ஸில் நல்ல விதமாக பேட்டிங் செய்து போட்டி எப்படி போகிறது என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆனால் எங்களின் வீரர்கள் அமைத்த பார்ட்னர்ஷிப் போட்டிக்கு மீண்டும் எங்களை கொண்டு வந்தது.
நாங்கள் எளிதாக 350 ரன்களுக்குள் சுருண்டு இன்னிங்ஸ் தோல்வியை தழுவி இருக்கலாம். ஆனால் அப்படி நடைபெறவில்லை. இதுவே எனக்கு மிகவும் பெருமையான விஷயம்தான். ரிஷப் பண்ட், சர்பராஸ் கானும் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது நாங்கள் அனைவருமே இருக்கையின் நுனிக்கு வந்து போட்டியை பார்த்துக் கொண்டிருந்தோம்.
பண்ட் அனுபவம் வாய்ந்த ஒரு பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அவர் தொடர்ந்து இதேபோல் பேட்டிங் செய்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. சர்பிராஸ் தனது மூன்றாவது அல்லது நான்காவது டெஸ்டில் தான் விளையாடுகிறார் என நினைக்கிறேன். ஆனால் அதற்குள் ஒரு அனுபவம் வாய்ந்த வீரர் போல் திகழ்கிறார். பெங்களூர் டெஸ்ட் சவால்களை அளிக்கும் என்று எனக்கு முன்பே தெரியும்.
வானமும் மேகமூட்டத்துடன் இருந்தது. ஆனால் நாங்கள் 46 ரன்களில் ஆட்டம் இழப்போம் என்று கொஞ்சம் கூட நினைத்து பார்க்கவில்லை. நியூசிலாந்துக்கு என்னுடைய பாராட்டுக்கள்.இது நிச்சயம் எங்களுக்கு பின்னடைவு தான். இதிலிருந்து நாங்கள் மீண்டு வருவோம் சொந்த மண்ணில் தோற்பது இது முதல் முறையல்ல. இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் இருக்கிறது. அதில் வெற்றி பெற முயற்சி செய்வோம் என்று கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.