IND vs NZ: உலகின் சிறந்த டி20 பவுலரை துவம்சம் செய்த சஞ்சு சாம்சன்.. ஒரே ஓவரில் 22 ரன்கள்
கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் அதிரடியான தொடக்கத்தை அளித்தார். ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரின் முதல் ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் என்ற மாபெரும் இலக்கை நிர்ணயித்தது.
கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் பவர்ப்ளே ஓவர்களில் மிகச் சிறப்பான அடித்தளம் அமைத்துத் தந்தார். இந்திய அணி முதல் மூன்று ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 42 ரன்களைக் குவித்தது. குறிப்பாக, போட்டியின் மூன்றாவது ஓவரை வீசிய லோக்கி பெர்குசனின் பந்துவீச்சை சஞ்சு சாம்சன் நாலாபுறமும் சிதறடித்தார்.

அந்த ஓவரின் மூன்றாவது பந்தில், ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே விழுந்த பந்தை சஞ்சு சாம்சன் கவர் திசையில் அடித்தார். மிட்-ஆஃப் திசையில் இருந்து மிட்செல் சான்ட்னரும், எக்ஸ்ட்ரா கவர் திசையில் இருந்து கிளென் பிலிப்ஸும் பந்தைப் பிடிக்க முயன்றனர். ஆனால், பந்து பவுண்டரி எல்லையைத் தொட்டது.
அதற்கடுத்து வீசப்பட்ட நான்காவது பந்தை கணித்த சஞ்சு சாம்சன், அதை லாங்-ஆன் திசைக்கு மேலே அபாரமான சிக்சராக மாற்றினார். தொடர்ந்து ஐந்தாவது பந்திலும் மிட்-ஆஃப் திசைக்கு மேலே பந்தை தூக்கி அடித்து மேலும் ஒரு பவுண்டரியைப் பெற்றார். இந்த ஓவரில் மட்டும் லோக்கி பெர்குசன் 22 ரன்களை விட்டுக்கொடுத்தார். இதன் மூலம் இந்திய அணிக்கு அதிரடியான தொடக்கம் கிடைத்தது.
இந்த டி20 தொடரில் சஞ்சு சாம்சன் பேட்டிங்கில் ஒரு வரலாற்று சாதனையைப் படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் 100 சிக்சர்களை விளாசிய முதல் இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் என்ற சாதனையை எட்டும் வாய்ப்பு அவருக்கு உள்ளது. இதுவரை எந்தவொரு இந்திய விக்கெட் கீப்பரும் இந்த இலக்கை எட்டியதில்லை.
இத்தொடரின் தொடக்கத்தில் சஞ்சு சாம்சன் இந்த சாதனையை எட்ட 13 சிக்சர்கள் தேவையாக இருந்தன. இந்திய அணியின் சேஸிங்கின் போது மேலும் இரு சிக்சர்களை விளாசியதன் மூலம் அவரது மொத்த சிக்சர்களின் எண்ணிக்கை 89 ஆக உயர்ந்துள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 சிக்சர்கள் என்ற மைல்கல்லை எட்ட அவருக்கு இன்னும் 11 சிக்சர்களே தேவைப்படுகின்றன.


Click it and Unblock the Notifications


