பெங்களூர் : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கில் காயம் காரணமாக விலகிய நிலையில் தற்போது அதற்கு பதிலாக சர்பிராஸ் கான் சேர்க்கப்பட்டிருந்தார். சர்பிராஸ் கான் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் அபாரமாக ரன்களை குவித்து வந்த நிலையில் அவருக்கு இந்திய கிரிக்கெட் அணியில் தாமதமாகவே வாய்ப்பு வழங்கப்பட்டது.
நடப்பாண்டு தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சர்பிராஸ் தான் சேர்க்கப்பட்டார். அதுவும் விராட் கோலி, ராகுல் போன்ற வீரர்கள் விளையாடாத நிலையில் அந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

இதனை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட சர்பிராஸ் கான் அந்த தொடரில் மூன்று அரைசதம் அடித்து அசத்தனார். இந்த சூழலில் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் கேஎல் ராகுல் அணிக்கு திரும்பியதை அடுத்து சர்பராஸ்கான் அதிரடியாக நீக்கப்பட்டார். அதே வேளையில் சர்பராஸ்கான் இரானி கோப்பையில் மும்பை அணிக்காக களம் இறங்கி இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
இதனால் பலரும் சர்பராஸ் கானை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் தான் கில் காயம் காரணமாக விலகியது அடுத்து நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சர்பராஸ் கான் சேர்க்கப்பட்டார். இந்த தருணத்தில் பேட்டிங் செய்ய கடினமான சூழல் இருந்த நிலையில் சர்பராஸ்கான் களத்திற்கு வந்தார்.
இந்திய அணி ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் விக்கெட்டை அடுத்தடுத்து இழந்த நிலையில் சர்பராஸ் காணும் தன்னுடைய திறமையை காண்பிக்க நல்ல வாய்ப்பு ஏற்பட்டது.ஆனால் சர்பராஸ்கான் மூன்று பந்துகளை எதிர்கொண்ட நிலையில் டக்கவுட் ஆகி வெளியேறினார். இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய மன உளைச்சலை கொடுத்தது.
வாய்ப்பு கிடைப்பதே கடினமாக இருக்கும் சூழலில், சர்பராஸ்கான் தமக்கு கிடைத்த தங்கமான வாய்ப்பை வீணடித்து விட்டதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனினும் இரண்டாவது இன்னிங்ஸில் சர்பராஸ் கான் பெரிய இன்னிங்ஸ் ஆடி இந்தியாவை காப்பாற்றி விட்டால் அவருடைய இடம் உறுதி ஆகிவிடும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.