மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் அணியாக இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தன்னுடைய ஐம்பதாவது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்து உலக சாதனை படைத்தார். இதேபோன்று ஸ்ரேயாஸ் பேட்டிங்கில் அபாரமாக விளையாடி சதத்தை கடந்தார்.

பந்துவீச்சில் தனி ஆளாக முகமது சமி ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் பலரும் இந்த மூன்று வீரர்களையும் பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில் இது குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் உசைன், நாளைய செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தியாக விராட் கோலியும் ஸ்ரேயாஸ் ஐயரும், முகமது சமியும் தான் இருப்பார்கள்.
ஆனால் இந்த அணியின் உண்மையான ஹீரோ என்றால் அது ரோகித் சர்மா தான். அவர்தான் இந்திய அணியில் இருந்த கலாச்சாரத்தை மாற்றி அதிரடி அணுகுமுறையை கொண்டு வந்தார். தினேஷ் கார்த்திக்கிற்கு இது நன்றாக தெரியும். இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக அரை இறுதி டி20 உலக கோப்பையில் விளையாடிய போது ரோகித் சர்மா நிதானமாக விளையாடினார். அப்போது குறைந்த ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தார். அப்போது தினேஷ் கார்த்திக் இடம் ரோகித் சர்மா இந்தியா அதிரடியாக விளையாடும் பழக்கத்தை கையில் எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இன்றைய ஆட்டத்தில் கூட ரோகித் சர்மா தான் ஆட்டத்தின் ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடினார். குருப் பிரிவு போட்டிகளில் விளையாடுவது வேறு, அரையிறுதி போட்டிகளில் விளையாடுவது என்பது முற்றிலும் வேறு. ஆனால் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா இன்றைய ஆட்டத்திலும் இப்படித்தான் விளையாட வேண்டும் என்று அச்சமின்றி அதிரடியாக தொடக்கத்தில் விளையாடினார். ரோகித் சர்மாவின் இந்த ஆட்டத்தை பார்த்த பிறகு மற்ற வீரர்களும் இதே அணுகுமுறையை எடுத்துக் கொண்டனர். இதன் காரணமாக தான் நேற்று இந்திய அணி 397 ரன்கள் வரை குவித்தது என்று ரோகித் சர்மா குறித்து நாசர் ஹுசைன் பாராட்டு இருக்கிறார்.