IND vs NZ: முதல் டி20யில சிவம் துபே vs நிதிஷ் குமார் ரெட்டி.. யாருக்கு இடம் கிடைக்கும்?
மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான வரவிருக்கும் டி20 தொடருக்கான இந்திய அணியில், முதன்மை வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக சிவம் துபே விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் அபிஷேக் நாயர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதலில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணியில் சிவம் துபே மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகிய இரண்டு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து பேசிய அபிஷேக் நாயர், நிதிஷ் குமார் ரெட்டியை விட சிவம் துபேவுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று கூறினார். இந்திய அணி நிர்வாகத்திற்கு துபே மீது அதிக நம்பிக்கை இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், நெருக்கடியான தருணங்களில் இந்திய அணிக்காக துபே பந்துவீசிய அனுபவம் கொண்டவர் என்றார்.
நிதிஷ் குமார் ரெட்டி ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக சிறப்பாக பந்துவீசியிருந்த போதிலும், இந்திய டி20 அணியில் இன்னும் பந்துவீச்சில் பெரிய அளவில் சோபிக்கவில்லை என்று நாயர் சுட்டிக்காட்டினார். மேலும், துபேவின் அதிரடி பேட்டிங் திறன் மற்றும் அவர் களமிறங்கும் வரிசை தற்போதைய இந்திய அணிக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இதுவரை 82 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள சிவம் துபே, பேட்டிங்கில் 61 இன்னிங்ஸ்களில் 28.04 சராசரி மற்றும் 149.87 ஸ்டிரைக் ரேட்டுடன் 1,178 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 6 அரைசதங்களும் அடங்கும். பந்துவீச்சில் 53 இன்னிங்ஸ்களில் 40 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள இவரது பந்துவீச்சு சராசரி 27.15 மற்றும் எகனாமி 9.96 ஆகும். கடந்த இரண்டு டி20 உலகக்கோப்பை தொடர்களிலும் இந்திய அணிக்காக இவர் முக்கியமான ஓவர்களை வீசியுள்ளார்.
அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் இந்திய வீரர் சட்டேஷ்வர் புஜாரா, அபிஷேக் நாயரின் கருத்திற்கு மறுப்பு தெரிவித்தார். முதன்மை ஆல்ரவுண்டராக நிதிஷ் குமார் ரெட்டியை தேர்வு செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார். டி20 போட்டிகளில் ஆடுகளத்தின் தன்மையைப் பொறுத்தே அணிகள் தேர்வு செய்யப்படும் என்பதால் எந்தவொரு வீரருக்கும் 100 சதவீதம் நிலையான இடம் இருக்காது என்று சுட்டிக்காட்டிய புஜாரா, துபே ஒரு சிறந்த பேட்டர் என்றும், அவரால் ஒன்று அல்லது இரண்டு ஓவர்களை மட்டுமே வீச முடியும் என்றும் கூறினார்.
எனவே, இந்திய அணிக்கு பந்துவீச்சை முதன்மையாகக் கொண்ட ஒரு ஆல்ரவுண்டர் தேவைப்பட்டால் நிதிஷ் ரெட்டியே சரியான தேர்வு என்று அவர் வலியுறுத்தினார்.நிதிஷ் குமார் ரெட்டி இதுவரை 9 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி, 8 இன்னிங்ஸ்களில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது பந்துவீச்சு சராசரி 20.80 மற்றும் எகனாமி 9.04 ஆகும். இது துபேவின் பந்துவீச்சு புள்ளிவிவரங்களை விட சிறப்பானதாகும். பேட்டிங்கில் 6 இன்னிங்ஸ்களில் களமிறங்கி 30.60 சராசரி மற்றும் 173.86 ஸ்டிரைக் ரேட்டுடன் 153 ரன்கள் குவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications


