IND vs NZ டி20 தொடரில் பயன்படுத்தப்படும் சானிக் தொழில்நுட்பம்.. இனி யாரும் ஏமாற்ற முடியாது
கிறைஸ்ட்சர்ச்: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில், மூன்றாவது நடுவரின் முடிவுகளுக்கு உதவ சானிக் என்ற புதிய தொழில்நுட்பம் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட உள்ளது. டிஆர்எஸ் ரிவியூவின் போது பந்து பேட்டில் பட்டதா என்பதைத் துல்லியமாகக் கண்டறிய இந்த ஒலி சார்ந்த தொழில்நுட்பம் பயன்படும்.
சானிக் என்பது நியூசிலாந்தைச் சேர்ந்த வெர்ச்சுவல் ஐ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு தொழில்நுட்பமாகும். போட்டியின் போது பந்து பேட்டில் உரசும்போது உண்டாகும் ஒலியைப் ஆய்வு செய்து, பந்து பேட்டில் பட்டதா இல்லையா என்பதை இது அடையாளம் காணும். விக்கெட் கீப்பர் அல்லது ஃபீல்டரிடம் பந்து செல்லும்போது ஏற்படும் பேட் எட்ஜில் பந்து பட்டதா என்பது குறித்த சந்தேகங்களைத் தீர்க்க இது மூன்றாவது நடுவருக்குக் கூடுதல் தகவல்களை வழங்கும்.

ஐசிசி மற்றும் பிசிசிஐ ஆதரவுடன் நடத்தப்பட்ட சோதனைக்கு பிறகே இந்தத் தொழில்நுட்பத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2008 முதல் ball-tracking அமைப்பிற்காக ஐசிசி-யின் அங்கீகாரம் பெற்றுள்ள 'வெர்ச்சுவல் ஐ' நிறுவனம், தனது டிஆர்எஸ் அமைப்பின் ஒரு பகுதியாக இந்த 'சானிக்' தொழில்நுட்பத்தை இணைத்துள்ளது.
இந்தத் தொழில்நுட்பம் கள நடுவரின் முடிவெடுக்கும் அதிகாரத்தை மாற்றுவதற்குப் பதிலாக, நடுவரின் தீர்ப்பிற்குத் தேவையான கூடுதல் தரவுகளை மட்டுமே வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய 'வெர்ச்சுவல் ஐ' நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பென் டெய்லர், சர்வதேச கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்தின் தொழில்நுட்பம் அங்கீகரிக்கப்பட்டிருப்பது தங்கள் நிறுவனத்திற்கு ஒரு முக்கிய தருணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து இடையிலான இந்தச் சுற்றுப்பயணத்தில் ஐந்து டி20 போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் இடம்பெற்றுள்ளன. தற்போது நடைபெறவுள்ள இந்தியத் தொடருக்கு மட்டுமே இந்த சானிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் பிற தொடர்களில் இதன் பயன்பாடு குறித்து ஐசிசி பின்னர் தீர்மானிக்கும்.


Click it and Unblock the Notifications


